விளக்கு வச்ச நேரம் --2

அன்பு வாசகர்கள் எதிர்பார்த்ததுபோல நம் விளக்கு வச்ச நேரத்.... கதை தலைவி , ஜோதிடர் கணித்தது போல் காத்திருந்த நல்ல பாம்புவினால் கடிபட்டார்.  இவர் கதைத்  தலைவி என்பதன் காரணமாக நம் வாசகர்கள் எண்ணியது போல் காப்பாற்றப் படுகிறார்.

நல்ல வேளை இவர் ஜோதிடத்தை நம்புவது போல் மிக அழுத்தமாக காட்ட வில்லை.
அம்மாவின் மூட நம்பிக்கையில் இருந்து தப்பிக்க இவர் படும் பாடு மிக அழகாக காட்டப் பட்டுள்ளது. மூட நம்பிக்கையில் மூழ்கிவிட்ட இவரது அம்மாவினைப் பார்த்தேனும் நம் மக்கள் இத்தகைய எண்ணங்கள் இல்லாமல் இருப்பார்களா?

பெண், பாம்பு கடிக்கவில்லை! என்று கூறியும் நம்பாத தாய் ! தன் மகளை மட்டும் கால் கழுவ சொல்லும் சுயநலம். இந்த காலத்திலும் சனி வந்து காலில் அமரும் என்ற மூடத்தனம்.

ஒரு நம்பிக்கை மட்டும் தானே என்று நம்பத் தொடங்கினால் காணும் எல்லா மூட எண்ணங்களும் நம்மை சூழும் என்பதற்கு நல்ல காட்டு இந்த அம்மா.

இதன் பின் நமது சிறப்பு ஜோதிடர் இந்த பெண்ணை பாம்பு கடித்து இருந்திருந்தால்  இந்த பெண் இரு தார மணம் செய்வது மட்டும் இன்றி ஒரே நேரத்தில் இருவரோடும் ஒரே வீட்டில் வாழ்வார் என்று கணித்துக் கூறும் திறன் வியக்கத்தக்கது.

இந்த பாடத்தை இவர் எங்கு கற்றாரோ?
இந்த வகையான செயல்திறன்மிக்க ஜோதிடர் இன்னும் நிறைய பேர் வேண்டும்!
நம் அரசு இரு தார மணம் சட்ட விரோதம் என சொல்லி இருப்பது இவருக்கு தெரியுமோ?

ராமாயணம் போன்ற பழங்கதைகள் இந்த நிகழ்வுகளை கொண்டு இருந்து அதைக் காட்டினால் நாம் இந்த அளவு அதைப் பற்றி சிந்திப்பது இல்லை. ஏனெனில் எல்லாம் பழங்கதை தானே! நம் பிள்ளைகள் கூட நம்பாது! ஆனால் நம் தாய்குலம் நம்பும்!

ஆனால் ஒரு சமூகக் கதையில் வீட்டில் வேளை கழிக்கும் பெண்களை தன் தொடர் பக்கம் இழுக்க இவர்கள் செய்யும் கீழ்மைக்கு என்ன முடிவு?

இவர்கள் தான் சிந்தனையாளர்களா?

விளக்கு வச்ச நேரத்திலே
நம் கலைஞர் தொலைக்காட்சியின் புதிய மக்கள் தொடர். பார்த்தவர்களை அறிவு வெளியில் முன்னேற்றும் தொடர்.
நமது பரந்த அறிவை மேம்படுத்தும் தொடர்.

ஜோதிடம் என்ற நமது அறிவுக்கு எட்டாத ஒன்றை சொல்லி அதனை எல்லோரும் பார்க்க வலியுறுத்தி  வருவது.

நல்ல புகழ் பெற்ற ஜோதிடர் உங்களுக்கு என்ன எந்த நேரத்தில் நடக்கும் என்பதை நிச்சயம் சொல்வார் என முன் நிற்பது.

இதை எல்லாம் நம் மக்கள் எங்கே நம்பி விடாமல் போய் விடுவார்களோ என்ற சந்தேகம் தீரவும், நம்மை மேலும் அதனை நம்ப செய்யவும், நம் மனதில் எழும் கேள்விகளை இவர்களே  எழுப்பி நம் கேள்விகள் தவறு என்று மிக அழகாக வெளிப்படுத்துகிறார்கள்.

"ஜோதிடம் தவறு" என்று சொல்வதாக இவர்களே காட்சி படுத்தி அப்படி சொன்னவர் ஜோதிடத்தை நம்பாததால் அடைந்த துன்பத்தை நமக்கு எடுத்து சொல்லி
நம் அறிவுக் கண்ணை திறந்து வைக்கின்றனர்.

இதில் வரும் முக்கிய காட்சியே " இளம்பெண் ஒருவர் ஜோதிடர் சொன்னது போல் பௌர்ணமிக்குள் பாம்பால் கடிபடுவதே."  ஆனால் காட்சிப்படி இந்த பெண் ஜோதிடம் நம்பாதவர். ஆனால் இவரைப் பாம்பு கடித்து விடுகிறது. இப்போது இவர் ஜோதிடம் நம்புகிறாரோ இல்லையோ நம் மக்கள் நிச்சயம் நம்பி விட்டனர்.

ஆபாசம் கூட நம் அறிவை அந்த நேரம் மட்டுமே மழுங்க செய்யும். ஆனால் இவர்கள் பரப்பும் இத்தகைய பொய்மைகள் நம் சமுதாயத்தை அடி பணிந்து வாழ செய்து நம்மை நாசம் செய்யும்.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் நம் எதிர்காலத்தைக் கண்டுபிடித்து சொல்லும் இந்த ஜோதிடர்களை நாம்  நம்பி வாழமுடியுமா?

ஏன் இவர்களே தாம் சொல்வது சரி என்று காட்ட ஏதாவது தவறான செயல்களை செய்யக் கூடாது?

வாழ்வது ஒரு முறை! பயம் இல்லாமல் வாழப் பழகுவோம்!