கணிணிக்கு ஏற்ற மொழி தமிழ்

சில நாட்களுக்கு முன் தமிழ் இணையத்தில் பக்கங்கள் பார்த்திருந்தபோது கணிணிக்கு ஏற்ற  மொழி தமிழ் என சொல்லி இருந்தது.

இதைப் பற்றி மேலும் தேடியபோது sanskrit மொழி கணினிக்கு ஏற்ற மொழி என ஆய்வு செய்துள்ளதாக யாரோ எழுதி இருந்தனர்.

இந்த இரு முடிவுகளும் எதை சொல்கின்றன என எனக்குப்  புரியவில்லை. கணிணிக்கு என C மொழியும் அதைத்தொட்டு வேறு ஜாவா, html ஆகியனவும் இருப்பது அறிகிறேன். இவற்றில் எங்கு மனிதர் பேசும் மொழிகள்  தமிழ், sanskrit வருகின்றன?

எனக்கு எதோ இவர்கள் சொல்வது புரியவில்லை என அறிகிறேன். யாராவது சொல்வீரா?

செம்மொழி  தமிழ் அறிவியல் படைப்புகளைக் கொண்டு உள்ளதா? தற்போதைய அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் கொண்டுள்ளதா? இல்லை என்பதே விடை.
இதை சரி செய்வது அவ்வளவு எளிது அல்ல. உலகின் பெரும்பாலான ஆராய்ச்சி இதழ்கள் english உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகளில் தான் உள்ளன. இவற்றை தமிழில் மொழி பெயர்ப்பது நிச்சயம் கால விரயம் என்று சொல்ல முடியாவிட்டாலும் அது தான் உண்மை.

தாய் மொழியில் படிக்கும் ஜப்பான், ஜெர்மனி, சீன மக்கள் அனைவரும் தங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆங்கிலத்தில் தான் வெளி இடுகின்றனர் .(பெரும்பாலும்)

ஆங்கில அறிவு இருந்தால், கற்கும் ஆர்வம் இருந்தால், தற்போதைய எந்த அறிவு இதழ்களையும் கற்று நம் அறிவை விரிவாக்கலாம். ஆனால் இந்த நிலை தமிழ் மட்டும் அறிந்த, கற்கும் ஆற்றல் உள்ளவருக்கு கிடைக்க நீண்ட காலம் ஆகும்.
புதிய கண்டுபிடிப்புகள் தமிழ் மூலம் வருவது கடினம். ஏனெனில் அதற்கென அடிப்படை அறிவு சொத்துகள் தமிழில் இல்லை. எந்த ஒரு புதிய அறிவியல் கலை சொல்லும் உலகின் எல்லோராலும் ஏற்கத்தக்க சொல்லாகவே இருக்க வேண்டியது அவசியம்.
அதனைத் தமிழ் செய்வது ஒரு புதிய கண்டுபிடிப்புக்கு  ஈடு.

ஆனால் அறிவியலின் பலன் எல்லோரையும் சென்று அடைய அது வட்டார மொழிகளில் பயனாளி இயக்கும் வழியில் வேண்டும்.

விவசாயத்துக்கு வயலும், வாழ்வும் போல. வேளாண்மையில் நாள்தோறும் ஏற்படும் முன்னேற்றங்கள் தமிழில் இல்லாவிட்டாலும் ஒரு அறிஞர் அதன் பயனை தமிழில் சொன்னால் போதும்.

இதைப் போலவே எல்லா அறிவியல் துறை முன்னேற்றங்களையும் தமிழில் செய்தியாக வெளியிடலாம். இதற்கு நாம் கலைச்சொல் அகராதி உருவாக்க வேண்டியதில்லை.

விண்டோஸ்? டெஸ்க்டாப்? இப்படி மொழி பெயர்ப்பது சரியா?
html, C, php, இதை எல்லாம் எப்படி பெயர்ப்பது?

நாம் எல்லோரும் அறிந்த cos, sin, tan இவற்றை எப்படி பெயர்ப்பது?
விலங்கு, தாவர அறிவியல் வகைப்பாட்டியல் பெயர்களை?

ஒரு தனி மனிதனுக்கு வேண்டிய அறிவியல் அறிவு அவன் மொழியில் கிடைக்க முதலில் முயல்வோம். அவன் பயன் படுத்தும் சாதனங்களை முதலில் அவன் மொழியில் பயன் செய்யும் நிலை உருவாக்குவோம்.

புதிதாக உங்கள் துறைகளில் நீங்கள் உண்டாக்கும் மாற்றங்களை தமிழ் செய்ய முயலுங்கள்.அறிவியல் தவிர்த்த மற்ற கலை, ஆராய்ச்சிகளை தமிழில் பெயர்த்தல் சிரமமாக இராது. அதை முதலில் செய்வோம். நம் அடுத்த தலைமுறை அடிப்படை அறிவை சிரமம் இல்லாமல், வெட்கம் இல்லாமல் தமிழில் பெற முயல்வோம்.
ஆங்கிலத்தைத் திறனுடன் படித்து அறிவைப் பருக்கும் வண்ணம் பழக்குவோம்.

நெருப்பு நரி வாழ்விடம் -மொழி -நாடு

நீண்ட நாட்களாக 
நான் கூகிள் மூலம் நெருப்பு நரியில் தேடி ஒரு இணைய தளம் செல்லும்போது அந்த இணைய தளத்தின் மொழி நான் இருக்கும் நாட்டின் மொழியாகவே உள்ளது. உதாரணமாக ஒரு பிளாக்கர் பயனரின் profile இங்கிலீஷ் அல்லாத மொழியாகவே உள்ளது. எனது இணைய தொடர்பை வைத்து இந்த உலவிகள் நான் இருக்கும் பகுதி தொடர்பான மொழி கொண்ட இணைய தளம் தருவது என்னைப் போன்ற மொழி அறியாத மக்களுக்கு மிக்க துன்பம்.

இதை எப்படி சரி செய்வது என நான் பல இடங்களில் தேடி செய்த பரிகாரங்களும் பலனளிக்கவில்லை,

முதலில் கணிணி control panel  சென்று உங்கள் மொழி, நாடு மாற்றுங்கள் என்று ஒருவர் சொன்னார். செய்தேன் பலன் இல்லை,

google chrome  இதைப் போல் geoposition கொள்வது இல்லை என ஒரு நண்பர் சொன்னார். அங்கேயும் இதே தொல்லை,

நெருப்பு நரியில் தேடி அவர்கள்(mozilla) இணையத்தில் கொடுத்த செய்திபடி about:config சென்று சில மாற்றம் செய்தேன். பயன் இல்லை.

நான் விரும்பும் இணைய தளம் ஆங்கிலத்தில் இருந்தாலும் இவை வேற்று மொழியில் வருவதை எப்படி தடை செய்வது என என்னால் அறிய முடியவில்லை.

இதனை எப்படி சரி செய்வது என யாராவது சொல்லுங்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் நெருப்பு நரி இப்படி தளத்தை மாற்றிக் கொடுத்தது அல்லாமல் இது வேறு மொழி ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்து இந்த தளம் காண்பிக்கவா ? என கேட்கிறது. என்ன பதில் சொல்ல?

சாதிகள் நம் அடையாளங்கள் !

இந்தியாவின் வட மாநிலங்களில் எல்லோரது பேரிலும் எதோ ஒன்று ஒட்டி இருக்கும்.
அது சாதிப் பெயராக இருக்கும் அவசியம் இல்லை. ஆனால் அதன் மூலம் அவரது சாதி அறிதல் எளிது. இந்த ஓட்டுப் பெயர் மூலமே பொது இடங்களில் அவர் அறியப் படுகிறார். ஆனால் மிக நெருக்கமானவர்களுக்கு அவர் பேர் அவர் அப்பா வைத்த பெயர் தான்.

பெரியார் போன்ற அரிய தலைவர்களின் முயற்சியால் நம் பெயரில் ஒட்டிய சாதிகள் நம்மை விட்டு விலகி ஓடின. பாரதி, வ.வு.சி இவர்கள் தங்களை தங்கள் சாதிப் பெயர்களிலேயே அழைத்து வந்துள்ளனர். அப்போதைய வழக்கம் அப்படி. அவர்கள் சாதிக்காக கொடி தூக்கினர் என்று சொல்ல முடியாது?  பெரியாரை நாயக்கர் என்று அளித்த சமூகம் நமது.

ஆனால் காமராஜ் , சிவாஜி , கருணாநிதி இவர்கள் பெயர்கள் பின்னால் சாதி சேர்த்து பாருங்கள். எவ்வளவு கீழாக இருக்கும் எனத் தெரியும்.  என் பெயரின் sur name  என் தந்தை பெயர், என் தாயின் பெயர், என் ஊரின் பெயர் இப்படி ஏதாவது இருந்தால் என்ன குற்றம்?
ஆனால் இதில் என் சாதியை நான் இப்போது சேர்த்தேன் என்றால் ?

இன்று நான் சந்திக்கும் பெரும்பாலான மக்கள் தாங்கள் இந்த சாதி என்று பெருமை கொள்வது இல்லை. ஒரு வேளை என்னுடன் இந்த சாதி ஒட்டி இருந்து இருந்தால் என்னை மற்றவர் நடத்தும் வகை ? நான் மற்றவரை நோக்கும் நிலை?

எதோ எங்கோ ஒரு மன மூலையில் பதுங்கி இருக்கும் இந்த சாதி பற்று நம்மை விட்டு நீங்க அதன் அடையாளங்களை நாம் நீக்க வேண்டும் நிச்சயமாக. பூநூல் அறுத்ததும் இதனைத் தொட்டே!

நம் தமிழ் மக்கள் தங்கள் பெயரில் நீக்கிய சாதியை சமூகத்தில் இருந்து நீக்கினால் எங்கு தம் தலைமையும், தனி தன்மையும் போய்விடுமோ என்ற அச்சத்தில் அவ்வபோது சில தலைகள் சாதிப் பெயரின் பெருமையை தலை தூக்கி விட முயல்கிறது.

சங்கங்கள் சார்பில் கட்சிகளை உருவாக்கி பிரிவு செய்யும் கயமை எண்ணம் கொண்டவரை நாம் விலக்குவோம்.

சாதி சங்கங்கள் இல்லாது ஒரு சமூகம் நம் பிள்ளைகள் காலத்திலேனும் உருவாக்குவோம். நம் சாதி அடையாளங்கள் நம் பிள்ளைகளை அடையாமல் காப்போம்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!
பிறப்பின் வழி வரும் இந்த அடையாளங்களை அறவே ஒழிப்போம்!

நீ இன்ன சாதி! என்பதை நீ! தான் நிச்சயம் செய்ய வேண்டும் உன் தந்தை அல்ல!