நட்பு சின்னங்கள் !


பிறந்தது  முதல் நம் வளர்ச்சியுடன் நமது நண்பர்களின் எண்ணிக்கையும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. சிறு பிள்ளைகளாக தெருவில் சுற்றி திரியும்போது நமக்கு கிடைக்கும் நண்பர்களை நமது பெற்றோர் கண்காணித்து அவர் தகுதிக்கு ஏற்றது போல் நம் நட்பை மாற்றுகின்றனர். இருப்பினும் நாம் விடுவதில்லை.

பின்னர் பள்ளியில் நம் பக்கத்தில் உட்கார்ந்தவனை மிகவும் நேசிக்க கற்றுகொள்கிறோம். அவனும் எப்போதும் நம்முடனே சுற்றி வருவான் பள்ளி முழுதும்.
பள்ளி நட்பு பெரும்பாலும் இருவகை நன்றாக படிப்பவனை சுற்றி, அல்லது நல்ல செலவு செய்பவனை சுற்றி.

விளையாடும்போது ஒரு வகையான நட்பு. பின்னர் வீடு நோக்கி செல்லும்போது ஒன்று. வீட்டின் அருகில் ஒன்று. பின் உயர்நிலை பள்ளி மாறும்போது நம்மை சுற்றி இருந்த நட்பு வட்டம் களைந்து புதிய நட்பு வட்டம் உண்டாகும். பழைய நட்பு விட்ட சின்னங்களாக நம் உடலில் எங்காவது தலும்பாகவும், மனதில் ஒரு மலர்ச்சியாகவும்.

உயர் பள்ளியில் மீண்டும் கிடைத்த நட்பு பள்ளி இறுதி வரை கூட வரும். இங்கேதான் நமது வாழ்நாள் நட்புக்கான தகுதிவுடைய நண்பர்களும் கிடைக்கின்றனர். இவர்கள் எந்த காலத்திலும் நம் நினைவில் நிற்பார்கள்.

கல்லூரி காலம் எல்லோரும் சொல்வது போல் எல்லாருக்கும் மகிழ்ச்சியை மட்டும் அளித்து விடுவதில்லை. ஒவ்வொரு பழக்கம் கற்றுத்தரவும் ஒவ்வொரு நட்பு வட்டம் உருவாகும். உயர்ந்த சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள ஒரு வட்டம், நமது மன விகாரங்களை வெளிக்காட்ட ஒரு வட்டம். வாழ்வின் லட்சிய முழக்கங்களை செவி மடுக்க ஒரு வட்டம்.  நம்மில் உள்ள அனைவரும் கொண்ட எந்த ஒரு பழக்கமும் நமது நட்பு வட்டத்தை பொறுத்தது.

இந்த மூன்று பருவத்தின் இறுதியில் பார்த்தால் நம் மன ஆழத்தில் ஒரு மகிழ்ச்சியை பூரிப்பை கொடுத்த நட்பு விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த நண்பர்களை நம் வாழ்வின் இறுதி வரை கொண்டு செல்லும் துணையாக கொள்ளலாம். இவர்கள் நமது மனதில் உண்டாக்கிய பதிவுகள் எளிதில் மறக்க கூடியதாக இருப்பதே இல்லை.

நமது நண்பர்களில் எத்தனை பேர் தங்கள் வாழ்வின் பாதையில் வெற்றி பெற்று இருப்பார்கள்? அவர்களின் தோல்விக்கு காரணம்? ஒரு வேளை நம்மால் அவர்களுக்கு உதவ முடியுமானால் தயங்காமல் உதவுவோம்.

கோவில்களில் தீபம் அணைந்தது : பெண்களுக்கு ஆபத்து என வதந்தி

என்னங்க? சேதி தெரியுமா?
தமிழ்நாட்டின் பல கோவில்களில் அணையா விளக்குகள் அணைந்தனவாம்!
சாயாக்  கொடி மரங்கள் சாய்ந்தனவாம்!

வீட்டின் பெண்களுக்கு இதனால் மிகுந்த துன்பம் ஏற்படும் என செய்தி ஊர்(நாடு) முழுவதும் பரவியது. பயந்த நம் மக்கள் வீட்டின் வாசலில் விளக்கு ஏற்றி பெருமானே! எங்கள் வாழ்வைக் காப்பாற்று என பிரார்த்தனை செய்தனர்.

கோயில்களை இடியுங்கள் என்று வேண்டிய பெரியார் வாழ்ந்த நாட்டு மக்களின் அறியாமைக்கு அளவே இல்லையா?

இவை  எல்லாம் நிச்சயம் நமது அறியாமையை, மூடத் தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

பாப்போம்! இன்னும் எவ்வளவு காலம் என!

தோசை சுடுவது எப்படி?
இன்னைக்கு எனது நண்பர்களை சாப்பிட அழைத்தேன். அவர்களும் வந்தனர். ஆனால் வந்தவர்களில் சிலர் இதுவரை தோசை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள்.
நான் பெரும்பாலும் யாரையாவது  சாப்பிட கூப்பிட்டால் தோசை சுடுவதே பழக்கம்.
(இதுதானே மிக எளிது?)

இவர்கள் தோசை என்பது ரைஸ் கேக் என்ற வகையில் அறிந்தவர்கள். எனக்கு இதில் உடன்பாடு இல்லை. pizza, burger, போன்ற அவர்களது உணவுக்கு அவர்கள் ஊர் பெயரையே பயன்படுத்தும் நாமே நமது உணவை அவர்கள் உணவின் பெயரோடு பொருத்தி அதே பெயரிலேயே சுட்டி வருகிறோம்.

இட்லி, தோசை முதலியற்றை செய்வது எளிதாக தோன்றினாலும் ஒரு குறிப்பிட்ட சுவையுடன் செய்வது மிக கடினமே.

முதல் தோசை வருவது போல் இரண்டாவது வருவதில்லை. ஒவ்வொரு நாளும் வேறு வேறு என்பது போல ஒவ்வொரு தோசையும் வேறு வேறு.

இந்த குழுவில் ஒரு நண்பர் தான் தோசை சுட வேண்டும் என்று என்னிடம் இருந்த தோசை மாவை வாங்கி தோசை தட்டில் ஊற்றி தடவினால் அது வட்டம் என்று இல்லாமல் பல பல சிறு சிறு திவலைகளாக தோசை சட்டியில் உருவம் பெற்றன.
இப்போது அவர் முகம் பார்க்கவே மிக பரிதாபமாக இருந்தது. இருப்பினும் அவற்றை எடுத்து போட்டு விட்டு அடுத்த தோசை நான் ஊற்றினேன். வடிவம் சரியாக வந்ததும் அவருக்கு ஒரே ஆச்சரியம் நான் நிலவை தொட்டு விட்டேன் என்பதாக!

இன்னொரு நண்பர் தனக்கு pizza போல் topping ஏதாவது செய்யுங்கள் என்றார். அவரிடமே என்ன காய்கறி பிடிக்கும் எனக் கேட்டு மாவு சற்று கனமாக ஊற்றி சூட்டை சிறிது குறைத்து மேலே அரிந்த சிறு துண்டுகளை சேர்த்து சற்று எண்ணை விட்டு அவரிடம் கொடுத்து அடுத்தது ஊற்றும் முன் அது காணாமல் போனது.

இது சரிபடாது! இப்படியே சாப்பிட்டால் யார் வயிறு நிறைந்தது என்று தெரியாது என்று நினைத்துக் கொண்டு வரிசை முறை உண்டாக்கி தோசை சுட ஆரம்பித்தேன்.

மாவு எல்லாம் தீர்ந்ததும் தான் அவர்கள் சாப்பிட்ட உணர்வு பெற்றனர். பிடித்ததா என்று கேட்டேன்! மிக நன்று என விடை பெற்றனர்.

என்ன தோசை நல்லா இருந்துச்சா?

உங்கள் நாட்கள் எண்ணப் படுகின்றன(மறு பதிப்பு)!

நாம் எல்லோரும் பிறந்தவுடனே நம் பயணம் இறப்பை நோக்கித்தான் என்பதை நம்மை பெற்ற தாயும் அறிவாள்! பிணம் சுற்றி அழும் கூட்டமும் அறியும் இனி இவர் எழ மாட்டார் என்று!


வாழ்வின் எதார்த்தம் பளிச்சென தெரிந்தும் நாம் ஏன் ஒருவரை ஒருவர் ஏளனத்தோடு, ஒரு வித கர்வத்தோடு பார்க்கிறோம்? நாம் தான் எல்லாம் அறிந்தவர், நமக்கு தான் எல்லாம் உரிமை என்ற சிந்தனை எப்படி தோன்றியது? 


நாம் பிள்ளைகளாய் இருந்தபோது இருந்த நேர்மை எங்கே? நேர்மை புதிதாக கற்பிக்கப் பட்டதா?
இல்லையே! குழந்தைகளிடம் பாருங்கள் அவர்கள் நேர்மை மிக இயல்பானதாக இருப்பது தெரியும்! ஒவ்வொரு முறை குழந்தையை பார்க்கும்போதும் புதிதாய் பூத்த மலர் போல் என்ன ஒரு மலர்ச்சி அதன் கண்களில்! என்று வியப்பேன். இந்த மலர்ச்சி ஏன் நம்மை விட்டு போனது? நான் அறிந்தவன் என்ற கர்வம் காரணமா?
Photo taken from tarjet,bangaladesh
ஜாதி, மதம் எப்படி நம்மை பிடித்துக் கொண்டது? எப்படி என் ஜாதிக்காரன் மீது மட்டும் எனக்கு அளவு கடந்த நம்பிக்கை? இவர்கள் நம்மை நம் சாவில் இருந்து காப்பாற்றுவார்களா?  
புதிதாய் பார்க்கும் யாரிடமும் அவர் என்ன சாதியாய் இருப்பார் என்று அறிந்துகொள்ள துடிக்கும் காரணம் என்ன? நம் ஆளுமை காட்டவா? அல்லது நம் அடிமைத்தனத்தை வெளிப்படுத்தவா?


கோயில் பூசாரியை சாமி! சாமி! என்று அழைப்பதன் நோக்கம் என்ன? அவர் நம் கடவுளிடம் சொல்லி நம் வாழ்நாளை நீட்டிப்பார் என்பதற்கா?


ஜோதிடம் இன்று நம் எல்லோரையும் ஆட்டி வைக்கும் முக்கிய காரணி ஆனதற்கு காரணம் என்ன? யோகம் என் ஜாதகத்தில் இருக்கிறதா என்று ஒவ்வொரு ஜோதிடன் இடத்திலும் கேட்டு கேட்டு அலுப்பது எதற்கு? எல்லாம் அறிந்த ஏகாம்பரம் போல் இந்த ஜோதிடர்கள் தாமே கடவுள் என்பதாக சொல்லும் கதைகளுக்கு காரணம் என்ன? என் ஜாதகத்தை கொடுத்தால் இவர்கள் சொல்லும் பரிகாரம் செய்தே என் சொத்து அழிந்து விடும் என்று தெரிந்தும் நாய் போல் இவர் பின்னால் சுற்றுவது ஏன்? 


தெருவெங்கும் பிள்ளையார் கோயில்கள் பலபல பெயர்களில் இருப்பது ஏன்?
ஊர் தோறும் புது புது சாமியார்கள் உதிப்பதும் அவர்கள் லிங்கம் முதல் பலபல பொருட்களை மந்திரம் மூலம் கொண்டு வருவதும்?


திருவண்ணாமலை முதல் கொண்டு புது புது கோயில்கள், புது புது வழிபாடுகள்! 
விதம் விதமான நேர்த்திகடன்கள்! அது என்ன இந்திய மக்களாகிய நமக்கு மட்டுமே 
இந்த கடவுள்கள் பரிகாரம் செய்ய சொல்லி வலியுறுத்துகின்றன?


இந்த முட்டாள் தனத்திற்கு எல்லாம் அடிப்படை காரணம் ? நம் எதிர்காலத்தின் மீது நமக்கு இருக்கும் பயம்? நாம் கற்ற கல்வி நமக்கு நம் மீது நம்பிக்கை வளர்க்காததா? நம்மை எப்போதும் ஒரு மயக்கத்திலே வைத்திருக்கும் இந்த மாயங்களை விட்டு எப்போது வெளி வருவோம்?


மீண்டும் மீண்டும் நாம் ஏன் நமக்கு தெரியாத ஒன்றின் மீது அளவு கடந்த பயம் கொண்டு அதைப் பற்றி எல்லாம் தெரிந்தவர் போல் பேசும் வீணர்களை கேட்டு வாழ்கின்றோம்?
ஆன்மிகப் பெரியோர்கள் எல்லோருமே சொல்லி சென்றனர் " உண்மை அடியாரை கோள் என்ன செய்யும் என". கோளறு பதிகமே பாடி சென்ற சமூகம் நமது. நம்மில் எத்துணை பேர் நாம் கற்ற கல்வி வழி சிந்தனை செய்து நம் செயல்களை நிறைவேற்றுகிறோம்?


வாழ்வது சில காலம்! வாழ்வும் தாழ்வும் நம் கையில்! வாழ்வோம் எப்போதும் புதிதாய் பிறந்தவர் போல்!


விபசாரம் சரியா?

நாம் இந்த உலகில் நம்மை சுற்றி பலவகையான மக்கள் பலவேறுபட்ட அனுபவங்கள் பெற்று வாழ்கிறோம்.

நமது அனைவரின் அடிப்படை சிந்தனை எப்படி என் சந்ததி சந்தோசமாக எதிர்காலத்தில் வாழும் என்பது தான். ஆனால் இதற்கும் மேல் தான் எப்படி மகிழ்வோடு இருப்பது என்பது தான்.

ஆணாகட்டும், பெண்ணாகட்டும் ஒரு கட்டத்தில் உடல் இச்சை ஒரு தேவையான மகிழ்வினை அளிக்கும் கருவியாக அமைகிறது.

என்னதான் இயற்கை உயிர் வளர்ச்சிக்காக இந்த இனபெருக்க செயபாட்டை உயிர்களுக்கு தந்திருந்தாலும் மனிதன் தனது மகிழ்வுக்கான ஒரு கருவியாக தான் வேண்டியபோது அடையும் வகையில் இந்த உடல் இச்சையை எண்ணுகிறான்.

ஆனால் நம்மில் எத்துணை பேர் நம் துணையை விட வேறு ஒருவரை எண்ணி நம் உடல் இச்சை பற்றி சிந்திக்கிறோம்?

இந்த காலத்தில் கல்வி தான் ஒரு மனிதனை சமூகத்தில்(அவனிடம் போதுமான பணம் இல்லாவிட்டால்) அங்கீகாரம் பெற்று வாழ செய்யும் கருவியாக உள்ளது.

ஆனால் இந்த கல்வி பெற மனிதன் தனது வாழ்வின் குறிப்பிட்ட இளமை காலத்தை வீணடிக்கிறான். இந்த காலங்களில் அவன் தான் கண்ணுருகிற எதிர் பாலினங்களை எல்லாம் மோகிக்கிறான்(மனதளவில்).

கனவு நாயகி என்று திரை நாயகிகளும் அழைக்கப்பட இதுவும் முக்கிய காரணமாகிறது.

மனதளவில் இன்றி சற்று திறன்? துணிவு? உள்ள சில மனிதர்கள் திருமணம் செய்யும் முன் இந்த அனுபவம் பெற விலை மகளிரை நாடுகின்றனர். ( விலை மகளிரின் தேவை?)

திருமணம் செய்த சிலர் ஒரு மாற்றத்திற்காக  விலை மகளிரை நாடுகின்றனர்.
நம் மனித இயல்பே இருப்பதை விட்டு இல்லாததை தேடுவது தானே?

திருவருட்செல்வர் படத்தில் சிவாஜி கணேசன் மன்னராக நடித்த முதல் காட்சியில் நாட்டியம் ஆடிய பத்மினியை அழைப்பார். உங்கள் மனைவியிடம் இல்லாதது என்னிடம் எது உள்ளது? என் பெண்மைக்கு ஒரு மன்னன் களங்கம் விளைக்கலாமா என்று பத்மினி கேட்பார்?

நீ ! பேரழகி! நாட்டிய ராணி! ஒருவகையான மென்மை உன்னிடம் உள்ளது. இவை எல்லாம் என் மனைவியிடம் இல்லை என்று சிவாஜி பதில் சொல்லுவார்.

சற்று பொறுங்கள் என்று கூறிய பத்மினி ஒரு தட்டு நிறைய பலவகையான இனிப்புகளை கொண்டு வந்து வைத்து இவற்றை உண்டு எது சிறப்பு மிகுந்தது என்று சொல்லுங்கள் என்று வினவுவார்?

எல்லாம் இனிப்புதான் என்று சாப்பிட்ட சிவாஜி சொன்னதும் பத்மினி பதில் சொல்லுவார். வடிவங்கள், சிறிது மாறுபட்டாலும் இனிப்பையே வழங்கும் இந்த இனிப்பை போல்
...... என்று கூறி முடிப்பார்.

மனிதன் தன் தேவைகளுக்காக மற்ற பெண்களின் பெண்மையை விலைபேசுவது ஒரு நாகரிகம் பெற்ற சமூகத்தின் கூறாக தெரியவில்லை. எந்த பெண்ணும் நாளும் வேறு, வேறு ஆணுடன் வெறும் பணம் மட்டும் கருதியே தன் உடல் வழங்க மாட்டாள்!

நடிகர் சிவகுமார் அவர்கள் தான் வாழ்ந்த தமிழ் திரை உலகில் மனைவியை தவிர வேறு எந்த பெண்ணையும் நாடியதில்லை என்று உரக்க கூறுகிறார்! இது அல்லவோ வள்ளுவன் விரும்பிய பேராண்மை?

நேற்று என் நண்பர்களுடன் ஒரு விவாதம் "விபசாரம் சட்டமாக்குவது பெண்களுக்கு பாதுகாப்பா? இல்லையா?"

சட்டமாக்கினால் பெண்ணை விலை பேசும் கயவர்க்கு உரிமை வழங்கியது போலாகாதா?
சட்டம் இல்லாத காரணத்தால் வாடிக்கையாளன், காவலன், மற்றும் பெரும்பாலானவர் இந்த பெண்களை இம்சிப்பதை வெளியில் சொள்ளமுடியாமை ?

இப்படி இருவகையான சிந்தனை!

ஆனால் எந்த ஆணும் தன் குடும்பபெண் எந்த காரணம் கொண்டும் (அவன் எந்த நாடானாலும்) விபசாரம் செய்வதை விரும்புவதில்லை. எந்த தாயும் தன் மகள் விபசாரம் செய்வதை விரும்பவதில்லை.

காணும் பெண்களை தம் உறவாக நினைத்து அன்பு செய்தால் அவர்களை இச்சை பொருளாக காணும் உளபோக்கு நிச்சயம் மாறும் என்பதில் ஐயம் இல்லை,.

குறைந்த பட்சம் வறுமை காரணமாக தொழிலுக்கு வரும் பெண்களை பணம் கொடுத்து விலை பேசாமல் அவர்கள் வாழும் வழி காட்டுவோம்.

தீபாவளி நாம் கொண்டாடலாமா?

நாம் தீவாளி கொண்டாடுவது சரியா?
நான் பணி செய்யும் இடத்தில் பல காலமாக என்னை சுற்றி வட இந்தியர்களே வாழ்கின்றனர். இவர்களுடன் நான் பழகுகிறேன். நட்பும் பாராட்டுகிறேன்.
இவர்களின் நட்பு வட்டத்துக்குள் நான் இருக்கின்றேன். இந்திய திருவிழா காலங்களில்
இவர்களுடன் சேர்ந்து உண்டு மகிழ்ந்து இருக்கின்றேன்.

இவர்களுடன் இந்திய அரசு செய்யும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல்களை சுட்டிக் காட்டுகிறேன். இதில் எங்களுக்குள் முரண்பாடு உண்டு. எனக்கு இந்தி தெரியாததை அவர்கள் எப்படி எடுத்து கொண்டாலும் என்னால் அவர்களுடன் இயல்பாக பழக முடிகிறது.

ஆனால் தீபாவளி போன்ற பண்டிகைகளை என் உளமார என்னால் கொண்டாடமுடிய வில்லை. என் முன்னோரை அழித்ததற்காக கொண்டாடும் விழாவாக என்னால் எப்படி ஏற்று கொள்ளமுடியும்?

தீபாவளி என்ற " இருளகற்றி ஒளி ஏற்றும்" நிகழ்வாக என்னால் இந்த விழாவை கொண்டாடமுடியும்.

எத்துணை பேர் இந்த மாதிரியான நாட்களில் தாங்கள் இத்தனை நாட்களில் கொண்ட தவறான எண்ணங்களை மாற்றிக் கொள்ள முனைகிறோம்?

நாம் வாழ்வது நிச்சயம் சில காலம். இந்த நாட்களில் நம்மை சுற்றி இருப்போருடன் இயல்பாக பழகுவதில் நாம் வெற்றி அடையலாம்.

இன்று என் நண்பன் ஒருவனுடன் பேசினேன். அவன் இதைபோல் பண்டிகைகள் நிச்சயம் ஏற்புடையதல்ல என்கிறான். அதில் எனக்கும் உடன்பாடு உண்டு. ஆனால் என்ன செய்வது?

என் மனம் முழுதும் நாம் வாழும் இந்த உலகில் வாழும் எளிய மக்களின் துன்பம் நீக்கும் முயற்சி எதுவும் என்னால் செய்ய இயலவில்லையே என்பது தான்.

என் உளத்தில் மாறாமல் எந்த நிலையிலும் இது உறுத்திக் கொண்டே இருக்கும்.

முந்திரி பர்பி!

காஜு  கத்லி செய்யலாம்னு 200 கிராம் முந்திரி வாங்கிகிட்டு வந்து  வலைபக்கங்களில்
செய்முறை தேடினேன். நிறைய வந்தது.

எல்லாவற்றின் பொதுவான விஷயம்
சர்க்கரை =முந்திரி(எடை)
சர்க்கரை ஒரு கம்பி பாகு பதம் வேண்டும்!
முந்திரி ஊற வைத்து தண்ணீர் இல்லாமல் அரைத்து வைக்கவும்.
சர்க்கரை பாகில் அரைத்த முந்திரி கலந்து மெது வெப்பத்தில் கிண்டி
சப்பாத்தி மாவு பருவம் வந்ததும் தட்டில் கொட்டி சப்பாத்தி கட்டையால் சமன் செய்து
விள்ளல் போடவும்.இதை தான் நானும் செய்தேன். எங்கோ எதிலோ தவறு! எனக்கு குழம்பு  தான் கிடைத்தது. சற்று மேலும் கிளறி குளிர்பதனம் செய்தால் இறுகும் என்று ஒரு குறிப்பு இருந்தது. அதுவும் செய்தேன். ஆனால் எனக்கு அல்வா போல் எதோ வந்தது.

நல்ல செய்முறை யாராவது சொல்லுங்கள். இல்லாட்டி எங்க தப்புனாவது சொல்லுங்கள்.

மரணம் நம்மை நெருங்காது

பிறர் துயரை தன் துயராய் எண்ணி வாடி
அவர் தம் துன்பம் தீர்க்க தன் நலனையும் விடுத்து
பாடுபடும் உள்ளம் கொண்ட மனிதனை மரணம்
நெருங்கவும் அஞ்சும்!

நான் இழந்த பதவி, சுகம், எல்லாம் மீண்டும் பெற அம்பாளை பிரார்த்திக்கிறேன்.

பூசாரியை கூப்பிட்டு பால்,பழம் உள்ளிட்ட பலவாறு அபிசேகம் செய்து பலதரப்பட்ட உணவு பொருட்களை நெய்யுடன் யாகத்தில் இட்டு (பட்டு, மேலும் பல ஆபரணங்களும் அடங்கும்) அம்பாளை வேண்டினால் அவள் நீ வேண்டாததையும் சேர்த்து தருவாள்.

இந்த தீபாவளிக்கு பிரத்தியங்கரா தேவிக்கு பதினாயிரம் எண்ணிக்கை கொண்ட இனிப்புகளை யாகத்தில் இட்டு எரித்து அந்த நறுமணத்தை அம்பிகை நுகரச் செய்து படைத்தால் இந்த உலக வாழ்வின் எல்லா துன்பம் நீங்கி நாம் வாழ நலம் செய்வாள்.

மனிதர்களே! நீங்கள் எப்போது உங்கள் சிந்தனை வழி செல்வீர்கள்?
இன்னொருவன் சொன்னதை சத்தியம் என்று நம்பி உங்கள் அறிவினை அடகு வைத்து
வாழும் நிலையை என்று மாற்றிக் கொள்வீர்கள்?.

பக்தி என்பது கடவுளை விலைக்கு வாங்குவதிலா? அல்லது பூசாரிக்கு படியளப்பதிலா?
வேதம்,வேதம் என்று பாடும் மனிதர்களே!
 உங்கள் எதிரில், உங்கள் பக்கத்தில்
நீங்கள் வாழும் இந்த உலகத்தில்,
உண்ண உணவின்றி மடியும்
பச்சை குழந்தைகளுக்காக என்றாவது
உங்கள் கண்களில் இருந்து சிறு கண்ணீராவது வருமா?

அவன் விதி என்று எளிதில் விட்டு விடும்
 உங்கள் நிலை இப்படியே இருந்து விடுமா?

வலிக்கிறது நெஞ்சம்!

நாங்களும்  வெடிப்போம் பட்டாசு
இந்த தீபாவளி மட்டும் அல்ல!
வரும் எல்லா தீபாவளிகளும்!
தமிழனுக்கு பிள்ளையாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக,
எப்போதோ யாரோ செய்த தவறுக்காக இப்போதும்,
துன்பத்தையே வாழ்க்கையாக கொண்டு வாழும் என்
மக்கள் பற்றி எமக்கு எந்த அக்கறையும் இல்லை!

எம் தொடக்கம் மறந்த மனிதர் நாங்கள்!
எம்மை நாய்கள் என்றும் வீணர் என்றும் பிறர் சொல்லும் போதும்
அவர் கால்பிடித்து வாழும் மனிதர் நாங்கள்.
தேர்தலுக்கு தேர்தல் மட்டுமே எங்களை நேசிக்கும் தேசிய கட்சிகள்!

எப்போதாவது யாராவது தமிழன் பெயர் கொண்டவன் பரிசு பெற்றால் தாமே பெற்றது போல் அகம் மகிழும் முட்டாள் மனிதர்கள் நாங்கள். இப்போது மட்டும் கருணாநிதி இவரை தமிழர் என்கிறாரே! என்றும் கேள்வி எழுப்புவோம் நாங்கள்!

எம் மொழி படித்து எம் மண்ணில் நாங்கள் எம் சிந்தனையோடு வாழ வழியற்று தேசிய மொழி படித்து நாய் வாழ்க்கை வாழும் வரையிலும் நாங்கள் உணர்வு பெறப் போவது இல்லை.

தாய்மடியில் தன் நிலை மறந்து வாழும் எங்கள் வாழ்வும் ஒரு வாழ்வா?
எங்களுக்குள்ளே பல பல பிரிவு!
பெயரில் அழித்த சாதியை நெஞ்சத்தில் எழுதி,
சாமிக்கும், அதன் பரிவாரங்களுக்கும் பயந்து
ஆசாமியை  நம்பி பரிகாரங்கள் செய்து
வாழும் மனித சமூகத்தின் பேர் தான் தமிழர்.

நாங்கள் கற்றவர்கள் வள்ளுவத்தையும்,பாரதியையும்
தேர்வுக்கு மட்டும்.

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே!

இவர்களுக்கு பதில் எழுதியே என் காலம் போய்டுமோ?

சமீபத்தில் ஒரு பதிவு இட்டேன். புதன் என்னைக் காப்பான் என்று?
இந்த பதிவு எதற்கு?
ஜோதிடம் பகுதியில் சிலர் தங்கள் சொந்த அனுபவங்கள் என்று இட்டுகட்டும் கதைகளை கேலி செய்யும் ஒரே நோக்கம்!

ஆனால் அவர்கள் மாறுவார்களா?
இன்று மேலும் ஒரு பதிவு. செவ்வாய் தோசத்தால் பிரிந்த காதலர்கள் !
அய்யா சாமிகளா! உங்கள் பதிவுகளுக்கு பதில் எழுதியே என் காலம் போய்டுமோ?
எப்படி உங்களால் வெட்கம் இல்லாமல் தவறான செய்திகளை அன்னை தமிழ் மொழியில் வெளியிட முடிகிறது?

விபசாரம் செய்பவனை மன்னிக்கலாம்.(அது உடலோடு மட்டுமே)
தன் உள்ளம் அறிந்து கயமையுடன் தவறான சிந்தனைகளை பரப்பும் மனிதர்களை நாம் என்ன செய்வது?

தயவு செய்து இனிமே காதலிக்கிறவங்க ஜாதகம் பார்த்து காதலிங்க ராசா!

புதன் என்னைக் காப்பான்!

என்னுடைய ஜாதகத்தை ஒரு பிரபல ஜோதிடரிடம் கொண்டு சென்று கொடுத்தேன்.
அப்போது எனக்கு 17 வயது. +2 தப்பி  தவறி பாசாகி விட்டேன். மேற்கொண்டு என்ன படிக்கலாம்? என் ஜாதகப்படி  நான் என்ன படித்தால் எனது எதிர்காலம் நல்லா இருக்கும்னு தெரிஞ்சிக்க உங்களை பார்க்க வந்தேன் என்று அவரிடம் சொன்னேன்.

முன் பின் எங்களுக்குள் எந்த பழக்கமும் இல்லை. இவர் ஒரு பிரபல ஜோதிடர் என்று எங்கள் ஊர் மக்கள் சொல்லி இருந்தனர். அதனாலே இவரிடம் வந்தேன்.

இவரைப் பார்க்க மிக நீண்ட வரிசையில் மக்கள் காத்துகிடந்தனர். எனவே அவர் குறிப்பிட்ட இரண்டு கேள்விகள் மட்டுமே ஒரு தடவை கேட்கலாம் என்று சொன்னார்.

அய்யா  எனக்கு வக்கீல் ஆகனும்னு ஆசை. என் ஜாதகப் படி நான் வக்கீல் ஆக முடியுமா சொல்லுங்கள் என்றேன். அவர் எனது ஜாதகத்தை பலமுறை பார்த்து உனக்கு பேச்சுத்திறன் உன் ஜாதகப்படி இல்லை. ஆனால் இரும்பு தொழில் உனக்கு சரி. (கவனிக்க, அப்ப எல்லாம் engineer தொழில் இல்லை) நீ எப்படியாவது பணம் கட்டி mechanical engineer சேர்ந்துடு புதன் உன்னைக் காப்பாத்துவார். பெரிய சாதனை எல்லாம் செய்வ அப்படின்னு சொன்னதுனால

இப்ப நான் ஒரு பிரபல தனியார் கல்லூரில நாலாவது வருஷம் படிச்சிகிட்டு இருக்கேன்,
என்ன ஒரு விசயம்னா ரொம்ப அரியர் இருக்கு.

இருந்தாலும் புதன் மேல பாரத்த போட்டுட்டு படிக்கிறேன்.

பாப்போம்.

ஓட்டுகள்

நான் tamilish  நீண்ட காலமாக பார்த்து வருகிறேன். இப்போது தான் இடுகைகள் இட முயற்சிக்கிறேன். எனது இடுகைகளையும் நீங்கள் எதோ போனால் போகட்டும் என்று publish செய்கிறீர்கள்.

ஆனால் எனக்கு ஒரு கேள்வி. அது எப்படி 10 வாக்குகளுக்கு மேல் எனது இடுகைகளுக்கு வாக்குகள் வருவதில்லை?

நான் நிறைய இடுகைகள் படித்தாலும் செல்வி கலகலப்ரியா அவர்களின் இடுகைகளை தொடர்ந்து வருகிறேன். அவருக்கு குவியும் வாக்குகள் சொல்லி மாளாது.

அதேசமயம் அவரது சில இடுகைகளுக்கு  நிறைய பின்னூட்டங்கள் வரும். ஆனால் வாக்குகள் வருவதில்லை. எனவே முன்னணி இடுகை வரிசை அடைவதில்லை. இந்த சில இடுகைகள் ஒன்றும் தரத்தில் குறைந்தவை அல்ல.

மேலும் பலரது இடுகைகள் இதேபோல் தான். என்ன காரணம்?

அன்போடு வாழ நான் விரும்புகிறேன்!

நான்  எல்லா உயிர்களையும் அன்போடு நேசிக்க ஆசைப்படுகிறேன்!
பாம்பினை கண்டு பயம் கொள்ளாமல் என்னால் இருக்க முடியாது.
வள்ளுவரே  சொல்லி இருக்கிறார். பயப்பட வேண்டியவற்றிற்கு பயம் கொள்ளுதல் வேண்டும் என்று.

நாய் பற்றி ஒரு இடுகை இட்டு இருந்தேன்.

இன்றைய தினமலர் செய்தி பாருங்கள்.

http://www.dinamalar.com/new/Incident_detail.asp?news_id=13238


விலங்கு பாதுகாப்பு சங்கத்தினர் மிக முயற்சி கொண்டு நாய்களுக்காக போராடி வருகின்றனர். இந்த உறுப்பினர்கள் பெரும்பாலும் சமூக மேல்தட்டு மனிதர்கள் ஆதலால் சாதாரண மக்கள் தெரு நாய்களால் படும் அவதி இவர்களுக்கு தெரியாது.
சாதாரண மக்களே தெரு நாய்களுக்கு உணவு அளித்து பராமிப்பவர்களாகவும் இருப்பது தான் இந்த கீழ்தட்டு மனிதர்களின் இயல்பு வாழ்வுக்கு சான்று.
ஆனால் அவர்களுக்கு  இந்த உயிர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு மருந்துகளை அளிக்க கூடிய தேவையான பணமோ, அதைப் பற்றிய விழிப்புணர்வோ இல்லை.

நம்மால் இயன்றவரை தெரு நாய்கள் பெருகாமல் செய்வோம்.(தைரியம் உள்ளவர்கள் இந்த நாய்களை தத்து எடுத்துக் கொள்ளலாம்)

தினமலர் செய்தியை இங்கு ஒட்டுகிறேன்.


உடுமலை: சுற்றித் திரியும் "வெறி நாய்'களால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிறுவனின் கழுத்தை வெறிநாய் கடித்ததில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.


 உடுமலை நகராட்சி மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள கணக்கம்பாளையம், பெரியகோட்டை, கண்ணமநாயக்கனுர், போடிபட்டி உட்பட பல ஊராட்சிகளில் நூற்றுக்கணக்கான வெறி நாய்கள் சுதந்திரமாக சுற்றி வருகின்றன. ரோடுகளில் நடந்து செல்லும் மக்களையும், வாகனங்களில் செல்பவர்களையும் குறிவைத்து, கடித்து வருகின்றன. உடுமலை நகராட்சி பகுதிகளில், சுற்றித் திரியும் வெறி நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சை செய்யப்பட்ட நிலையிலும், வெறிநாய்களின் எண்ணிக்கை குறையவில்லை.


 தினமும், பலர் வெறி நாயால் கடிபட்டு மருத்துவமனைக்கு செல்லும் அவலம் தொடர்கிறது. உடுமலை ஜீவா நகர் பகுதியில் சுற்றித் திரிந்த வெறிநாய், பல நாட்களாக அவ்வழியே, சென்றவர்களை கடித்து வந்துள்ளது. நேற்று முன்தினம், ஐந்து வயதான காளீஸ்வரன், நடந்து சென்றபோது, சிறுவனின் மீது பாய்ந்து கழுத்து, முகம், உடல் பகுதிகளை வெறிநாய் கடித்தது. அருகிலிருந்தவர்கள் சிறுவனை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, வீட்டிற்கு அழைத்து சென்றனர்.


 இந்நிலையில், இரவு, கடும் காய்ச்சலுடன், செய்கைகளில் வித்தியாசம் தெரிந்ததால் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். தற்போது, உடுமலை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் காளீஸ்வரன், கடுமையான காயங்களுடன் இருப்பதோடு, அதிர்ச்சியிலிருந்து மீளாமல் வெறித்தபடியே அமர்ந்துள்ளான்.

நன்றியுள்ள நாய்கள் !

என் சிறு வயது முதல் நாய்கள் என்றால் உள்ளுக்குள் ஒரு அச்சம்.
கடித்து விட்டால் நமக்கு ராபிஸ் வந்து விடும் என்பதில் அதீத நம்பிக்கை.
எனவே நாய் இருக்கும் பக்கமே போக மாட்டேன்.

ஆனால் விதி யாரை விட்டது?
சென்னை தெருக்களில் திரியும் நாய்களிடம் இருந்து நாளும் விலகி செல்வதே மிகவும்
பயங்கரமானது. தூங்கி கொண்டு தான் இருக்கின்றன என்று மிக மெதுவாக அந்த இடத்தை விட்டு நகரும் நிலையில் ஒரு குரைப்பு செய்யும் இந்த நாய் அந்த பகுதி நாய்களை எல்லாம் தன் படை பலத்தில் சேர்த்துக் கொள்ளும். மிக வேகமாக நடக்கவும் பயம். நிற்கவும் பயம். மிக நிதான நடை வேண்டும் இங்கே!

இந்த விலங்கு பாதுக்காப்பு சங்க உறிப்பினர்கள் தெரு நாய்களை நகராட்சி பிடித்து செல்லக் கூடாது என்று சொல்வதில் நம் எத்தனை பேருக்கு உடன்பாடு இருக்க முடியும்?
சில நேரங்களில் சிறுவர்,சிறுமியரை இவை கடித்து செய்யும் இம்சைகளுக்கு அளவில்லை.

வேறு வீடு வாடகைக்கு பெயர்ந்தோம். அங்கு பக்கத்து வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்தனர். அது புதிதாக யார் வந்தாலும் குரைக்க ஆரம்பித்து விடும். அதை பார்கவே மிக பயமாக இருக்கும். அதன் உயரமே நம் இடுப்பை தாண்டி விடும். அதை அவர்கள் கொஞ்சும் அழகே தனி. நான் அதன் அருகில் ஒரு நாளும் சென்றதே இல்லை.

நாய் வளர்ப்பவர் எல்லோரும் சொல்லும் ஒரு வாக்கியம் "எங்கள் ........(பெயர்) ரொம்ப நல்லது. யாரையும் கடிக்காது. (அப்புறம் எதற்கு வாசலில்)" பயப்படாதீர்கள்.

சரிதான். உங்கள் நாய் நல்ல நாய் என்று உங்களுக்கு தெரிகிறது. நாய்க்கு அது தெரியுமா?
அல்லது என் மனம் தான் அதை நம்புமா? பார்க்கும் போதே குலை நடுங்கி விடுகிறது.

சில நாட்கள் முன் சென்ட்ரல் சென்று இருந்தேன். அங்கு வெடிகுண்டு கண்டுபிடிப்பதற்காக நாய்களுடன் காவலர்கள் நிலையத்தை வலம் வந்து கொண்டு இருந்தனர். நான் வண்டியில் ஏறும் சமயம் உள்ளிருந்து ஒரு நாய் என் மேல விழும் வண்ணம் வந்தது.

என்னால் இந்த அதிர்ச்சியை தாளவே முடியவில்லை.


நாகரிக சமூகத்தில் வாழும் நாம் ஒரு பிள்ளைக்கு பாதுகாப்பு அளிக்க தயங்கும் நாம் நாய்கள் வளர்க்க மட்டும் தவறுவது இல்லை. அவற்றை பராமரிக்க நாம் மிக அதிக செலவு செய்கிறோம். ஆனால் ஒரு அநாதை குழந்தைக்கு உதவி செய்ய மறுக்கிறோம்.
நம் இல்லங்களில் பணி செய்யும் வேலையாட்களுக்கு ஊதியம் தருவதில் சிக்கனம் கடைப் பிடிக்கும் நாம் நம் நாய்களை சுகபோகமாக வளர்ப்பதில் குறை வைப்பது இல்லை.

katharikaai kulambu!

சில நாட்கள் முன்பு எனது நண்பர்களை என் வீட்டுக்கு சாப்பிட அழைத்திருந்தேன்.
ஆனால் அவர்கள் இந்திய உணவை உண்ண இயலாதவர்கள்(காரம் கிட்டே வரக்கூடாது)

இவர்களுக்காக நான் சமைத்த ஒரு குழம்பு இங்கே

கத்தரிக்காய் குழம்பு!
மிளகாய் ( 0 gram)
கொத்தமல்லி (2 tea spoon)
மூன்று வகை பருப்புகள்(துவரம்,உளுந்து,கடலை)
வெந்தயம், சீரகம்,மிளகு  சிறிது
இவற்றை நல்ல முறையில் வறுத்து அரைத்து வையுங்கள்.

மிக முக்கியமான மாற்றமாக தேங்காய்க்கு  பதில் நான் இங்கு கேரட்டை துருவி வணக்கி
அரைத்து வைத்துக் கொண்டேன்.

இப்பொழுது வெங்காயம், கத்தரிக்காயை  சிறு துண்டுகளாக அரிந்து கொண்டு எண்ணை விட்டு கடுகு தாளித்து, வெங்காயம் போட்டு நன்றாக வணங்கியபின் கத்தரிக்காய்களை இட்டு மேலும் சிறிது எண்ணை விட்டு வணக்கியதும் தக்காளி(நன்றாக பழுத்த) மூன்று போட்டு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். இந்த வேளையில் அரைத்து வைத்த பொருட்களை(கேரட், குழம்பு தூள்) இதில் இட்டு நன்றாக கொதித்து வந்ததும் தாளித்து இறக்கவும்.( தோசைக்கு நன்றாக இருந்தது)

உளறல்கள்!

முதுமை

சாய்வு நாற்காலியில் தெரிந்தது ஊஞ்சலின் சுகம்!
பேரன் அழுகையில் தெரிந்தது பிள்ளையின் வலி!
பேத்தியின் கொஞ்சலில் தேனின் சுவை !
கைத்தடியில் புரிந்தது கால்களின் தேவை!
மருமகளின் கோபத்தில் தெரிந்தது மனைவியின் பொறுமை!
கண்ணாடியில்  தெரிந்தது காலத்தின் கோலம்!
மாலையில் புரிந்தது காலையின் புதுமை!


வெண்மை
இறை நேசர் : இறைவனின் உள்ளம்
சகுனம் பார்ப்பவன்: அமங்கலம்
பெண்: விதவையின் துயர்
அரசியல்வாதி: சட்டை
அறிவியலாளன் : நிறங்களின் ஒருமை
பண்பாளன்: சத்தியத்தின் ஒளி