வாழ்வில் ஒரு நாள்!

பள்ளி விட்டு வீட்டுக்கு வந்தான் வளவன். தங்கை கமலமும், ரகுவும் விளையாடிக் கொண்டு இருந்தவர்கள் இவன் நிழல் தெரிந்ததும் பாய்ந்து கட்டிக் கொண்டனர்.
அண்ணா! அண்ணா! என்னைத் தூக்கு! என்று ஆரவாரம் செய்தனர். கை, கால் கழுவி வந்தவன் இருவரையும் தூக்கிக்கொண்டு தட்டாமாலை சுற்றினான்.

காட்டு வேலைக்கு சென்ற அம்மா இன்னமும் வீடு வரவில்லை. அப்பா எதோ கூலி வேலை செய்து வந்தார். இவனுக்கு பசி. வீட்டில் என்ன இருக்கிறது என்று பார்த்தான். காலையில் வடித்த சோறும், மூன்றாம் நாள் வைத்த புளிக் குழம்பும் ஒரு தட்டில் போட்டு எடுத்து வந்து மூவரும் உட்கார்ந்து ஆளுக்கு ஒரு வாய் சாப்பிட்டனர். மூவரின் வாயில் இருந்து ஒழுகிய சோறு அந்த தட்டில் எஞ்சி இருந்தது. அதனையும் உண்டு கை கழுவினான்.

அம்மா வர இன்னம் வேளை இருந்தது. அடுப்பு பற்றவைத்து உலை வைத்து அரிசி களைந்தான். பொழுது இருட்டும் வேளையில் அம்மா வந்தாள். துணிமுடிப்பில் எடுத்து வந்த கரிசலாங்கண்ணி கீரையை அம்மாவும் மகனும் ஆய்ந்தனர். மண்ணெண்ணெய் விளக்கு சற்று மங்கலாக எரிந்ததால் கடைக்குப் போய் எண்ணை வாங்கி வந்து ஊற்றினான்.

சமையல் வேலை முடிய இரவு ஒன்பது ஆகி விட்டது. சின்னது இரண்டுக்கும் சோறு ஊட்டி படுக்கை விரித்தாள் அம்மா. அப்பா வரும் அரவம் கேட்டது. அன்றைய வேலைக் களைப்பு அவர் முகத்தில் அந்த இருட்டிலும் தெரிந்தது, கூடவே கெட்ட சாராய நெடியும்.

இவனை அருகில் அணைத்து முத்தம் கொடுத்தார். இவன் தன் முகத்தை திருப்பிக் கொண்டான். அவரை விட்டு வெடுக்கென விலகி வந்தான். இரண்டு நாட்கள் முன்புதான் இவனிடம் சத்தியம் செய்து இருந்தார் " இனிக் குடிக்க மாட்டேன் என்று". இன்று மீண்டும்.
இவனுக்கோ குமட்டிக் கொண்டு வந்தது. இதைகேட்டே ஆகவேண்டும் என்று முடிவு செய்தான். அதற்குள் அம்மா இவனிடம் இது எதையும் கேட்காதே என்று முனு முனுத்தாள்.  என்னடி அங்க குசு! குசு!னு பேச்சு என்று அப்பா சத்தம் போட்டார்.

ஒன்றும் இல்லை! என்று பதில் சொல்லிவிட்டு சாப்பிட தயார் செய்ய உள் எழுந்து போனாள். அந்த நேரத்திலும் அம்மா கடைந்த கீரை மணத்தது. அப்பாவின் தட்டில் சோறு போட்டு கீரை வைத்தாள். ஒரு வாய் பிசைந்து உண்டவர் என்னடி உப்பு கூட போடத் தெரியாதா? எத்தனை தடவை சொன்னாலும் இப்படி தானா என்று சற்று தொனி ஏற்றி கேட்டார்.  நான் பார்க்கும்போது சரியாகத்தான் இருந்தது. இதோ நீங்கள் வேண்டும் அளவு போட்டு கொள்ளுங்கள் என்று உப்பு கிண்ணத்தை அருகில் வைத்தாள். ஏண்டி! நான் என்ன சொரணை கெட்டவனா என்று உப்பினை அந்தப் பக்கம் தள்ளி வைத்தார்.

வீட்டில் அரிசி தீரபோகுது அரிசி வாங்க பணம் வேண்டும் என்று இவன் ஆரம்பித்தான். அம்மா இவனை தீரா கோபத்துடன் பார்த்தாள். என்னடா! உங்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் விடியாதா? என்று அவர் எகிறினார். இப்போது அவர் பேசும் பேச்சுகள் கேட்டு அவன் காதுகள் கூசிப் போயின.

கோபத்தில் அவர் முன்பு இருந்த சோற்றுப் பாத்திரங்களை விசிறி அடித்தார்.  பதிலுக்கு அம்மா எதோ சொல்லப் போக இவர் எழுந்து காலால் உதைக்க முனைய இவன் குறுக்கே விழுந்து தடுத்தான். இவனை ஒரு அறை அறைந்து அம்மாவை ஒரு உதை விட்டார். அம்மாவிடம் இருந்து விசும்பல் மட்டுமே வெளி வந்தது. ஆக்கிய சோறும், கீரையும் அந்த அறையின் நாற்புறமும் சிதறிக் கிடந்தன.

இவனுக்கு பசியும் அடியும் சேர்ந்து தலைவலியை உண்டாக்கி விட்டன. அப்பா வெளியில் கிடந்த கட்டிலில் படுத்துக்கொண்டார்.

என்றும் இனியவை!

என்  உள்ளத்தில் என்றும் மகிழ்வையும் , இன்பத்தையும் ஏற்படுத்தும் சில!

எழு ஞாயிறு
உயர்ந்த மலைகள்
மழை மேகம்
பெய்யும் மழை 
விரிகடல்
அலையோசை
பனிப்புல்
இளந்தளிர்
மலர் மொட்டு
மலர்ந்த மலர்,
பறவைகளின் பேச்சு
மழலை சிரிப்பு,
புன்னகை(எங்கிருந்து வந்தாலும்)
பூரண அறிவு (சிவாஜியின் நடிப்பு)
பேரமைதி


இன்னும் நீளமாகலாம். இங்கேயே முடிக்கிறேன்

சிக்கனம் தேவையா?

நாம்  வாழும்  இந்த பூமியில் உள்ள எல்லோரும் ஒரே மாதிரி வசதிகளுடனும் தேவைகளுடுனும் வாழ்வதில்லை.

நமக்கு எது விருப்பமோ அது பிறருக்கு வேண்டாததாக இருக்கிறது.

ஆனால் நம் எல்லோருக்கும் தேவையான காற்று, நிலம், நீர் இந்த மூன்றினையும் நமது வருங்காலத்துக்கும் விட்டு செல்ல வேண்டிய கடமை நமக்கு உண்டு.

ஆனால் என்ன நடக்கிறது இங்கு?

எவன் கையில் இவை முதலில் கிடைக்கிறதோ அவன் இவற்றை நாசம் செய்வதில் முதன்மை பெறுகிறான்.

ஐந்து நக்ஷத்திர ஓட்டல்களில் மிக தரமான தண்ணீர், காற்று, நிலம் எல்லாம் பணம் படைத்தவனுக்கு கிடைக்கிறது.

ஆனால் இந்த ஒன்றும் இல்லாத பன்னாடை இருக்க இடம் இல்லாமல் குடிக்க நீர் இல்லாமல் தவிக்கிறான்.

இவன் சிக்கனம் செய்து என்ன செய்து விட முடியும்?
இவனிடம் கிடைப்பதே கொஞ்சமோ கொஞ்சம். அதில் இவன் எதை சிக்கனம் செய்வான்?

பணம் படைத்தவன் மட்டுமே நாம் வாழும் இந்த உலகின் எதிர்காலத்தை நிச்சயம் செய்கிறான்.(இங்கு பணக்கார நாடு உட்பட)

இவர்களிடம் சிக்கனம் செய்ய சொல்லுங்கள். அதனால் நிச்சயம் பயன் உண்டு.

ஆனால் இவர்கள் கேட்பார்களா?

தங்கள் உரிமைப் பொருட்களை என்ன செய்யவும் தெரியும் இவர்களுக்கு, பயன்படுத்தாமல் குப்பையில் போடும் வள்ளல்கள் இவர்கள்.

செய்தி!
1.2 litre  தண்ணீரில் குளித்ததாக (தண்ணீர் சிக்கனம் வலியுறுத்தி ) ஒருவர் சொல்கிறார்.

இதனால் பயன் என்ன? ஐந்து நக்ச்சதிர முதலாளிகள் சிக்கனம் செய்து விடுவார்களா?

மக்களே! ஒன்று புரிந்து கொள்ளுங்கள். சிக்கனம் உள்ளிட்ட எல்லா உபதேசங்களும் ஒன்றும் இல்லாத பன்னாடைகளுக்கு! நமக்கல்ல!.

தமிழ் கேட்டு என் உள்ளம் கொதிக்குது!

தமிழகத்தில் ஆங்கிலத்தில் புலமை பெற்று வாழும்  மக்கள் சாதாரண தமிழக மக்கள் பேசும் ஆங்கிலம் அவர்கள் காதில் கொடூரமாக இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

தேள் இவர்கள் காதில் கொட்டுவது போல் உள்ளதாம் நம்மவர் பேசும் ஆங்கிலம்.

தமிழகத்தில் தமிழனுக்கு பிறந்து வாழ்ந்து வரும் பலதரப்பட்ட இந்த நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் பெருங்குடி மக்கள் பேசும் தமிழ் கேட்டு என் உள்ளம் கொதிப்படைவதை எங்கு முறை செய்வது?

பிற மொழி கலக்காமல் தமிழ் பேசு என்று சொன்னால் வந்து கடிக்கும் இவர்கள் தமிழ் நாட்டில் வாழும் மக்கள் தாங்கள் பேசும் ஆங்கில சொற்களை சரியாக சொல்லாவிட்டால் ஏன் இத்தனை கொதிப்பு அடைகின்றனர்?

வேற்று மொழிக்கு வக்காலத்து வாங்கும் இந்த வீர மனிதர்கள் தம் தாய் மொழியில் என்ன தெரிந்து வைத்து உள்ளனர்.

தம் குழந்தைக்கு பேரே தம் மொழியில் வைக்காத இந்த அறிவிலிகளை என்ன செய்யலாம்?

பாரதி இருந்தால் இவர்கள் பேசும் தமிழ் கேட்டு நாய்கள் குரைக்கின்றன என்றல்லவா தம் காதுகளைப் பொத்திகொள்வான்!

பரிகாரம் செஞ்சிகிங்கோ!

வாக்கிய பஞ்சாங்கப்படி, சனிபகவான் இன்று மாலை 3.27 மணிக்கு, சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். நவக்கிரகங்களில் ஒருவரான சனிபகவான், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சியாவார்.

இவரே, மக்களின் ஆயுள் மற்றும் தொழிலை நிர்ணயம் செய்யும் பிரதான கிரகமாக இருக்கிறார். இவர் பெயர்ச்சியாகும் ராசிகளைப் பொறுத்து, ஒவ்வொருவரின் ஆயுளும், தொழிலும் மாற்றம் பெறும்.

இது வரைக்கும் டாக்டரா இருந்தவங்க ஆசிரியராகவும் திருடனா இருந்தவங்க வக்கீலாகவும் மாற நிறைய வாய்ப்புள்ளது. இதுவரைக்கும் நல்லா இருந்தவங்க பன்னி காய்ச்சல், புற்று நோய், மேலும் பல நோய்களுக்கு ஆளாக வாய்ப்பு அதிகம். ரொம்ப வியாதி இருந்தவங்க குனமாகிடுவாங்க. இவங்க டாக்டர பாக்க தேவையில்லை. 

சனிபகவான், அவருக்குரிய சனிக்கிழமையான இன்று பெயர்ச்சியாவது விசேஷமாகக் கருதப்படுகிறது. எண் கணிதப்படி சனிபகவானுக்குரிய எண் எட்டு. இன்று 8ம் எண் ஆதிக்கம் உள்ள நாள். மேலும், இன்று எட்டாம் திதியான அஷ்டமியும் இருக்கிறது. சனீஸ்வரர், அவருக்கு உகந்த நாளில் பெயர்ச்சியாவதால், அவ்வளவாக தீய பலன் இருக்காது என கணிக்கப்பட்டுள்ளது.

சிம்மம், கன்னி, துலாம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இது ஏழரைச்சனி காலம்.  இந்த ராசியில் பிறந்தோரும், இந்த ராசிகளை லக்னமாக உள்ளவர்களும் சனிபகவானுக்கு பரிகாரம் செய்து கொள்வது நல்லது.

இதனால நாங்க சொல்றதெல்லாம் என்னனா ,  இருக்கற காச எல்லாம் சேர்த்து பக்கத்துல இருக்குற கோயில் பூசாரி கிட்ட கொடுத்து பரிகாரம் பண்ணிகிங்க. மேலும் பல தரப்பட்ட தானியங்கள வாங்கி இவங்க கிட்ட தந்தா எந்த துன்பமும் வராம பாத்குவாங்க.




மடையர்கள் ஜாக்கிரதை!

இந்த  பதிவு வலையில் வந்த பதிவுக்கு பதில் பதிவு! அங்க பின்னோட்டம் இட்டா நிச்சயம் வராதுன்னு தெரியும். 
அதனால இங்க!

நம்ப அறிவாளிங்க ஏன் நவகிரக கோயில் கட்டுனாங்கன்னு ஒரு விளக்க பதிவு பார்த்து இருப்பிங்க. அதுக்கு பதில் இங்க. மேலும் அந்த பதிவை இங்கு குறிப்பிடாமல் எழுத முயற்சிக்கிறேன்.  சில சொற்றொடர்கள் அங்க இருந்து பெறப்பட்டுள்ளது. 
இத எல்லாம் காபி ரைட் கேட்பார்களோ? சுடப் பட்டவை சிறிய எழுத்துகள். 




"தமிழகத்தில் நவக்கிரகங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கோவில்களும் இதே போன்ற பல நன்மைகள் கருதியே கட்டப்பட்டுள்ளன. கிரகங்களின் சுற்று வட்டப்பாதையில் அந்த இடங்கள் இவ்வாறான புவியியல் முக்கியத்துவம் பெற்றுள்ளன என்பதையே இது காட்டுகிறது."


"ஆனால் எல்லாவற்றையும் அறிவியல் கொண்டே நிரூபிக்க முடியாது. அது வாழ்ந்து பார்க்கும் போது காலத்தால் மட்டுமே நிரூபனம் ஆகும்."

அதாவது நாங்க எல்லாம் ஜோதிடம் என்கிற குப்பைய நம்பி செத்த பிறகு?

விவேகானந்தருக்கும்,  பாரதிக்கும் தெரியாத உண்மைய கண்டுபிடிச்ச மகானுக்கு ஒரு வணக்கம் போடுங்கப்பு!


"அவ்வளவு ஏன். ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன், மகாலய அமாவாசை அன்று இறந்து போன முன்னோர்களுக்கு தர்பனம் செய்வார்களே! அப்படி என்ன விஷேஷம் அந்த நாளில் என்று தோன்றும்.  வருடத்திலேயே சந்திரன் பூமிக்கு மிக அருகில் வரும் நாள் அது தான். இது புவியியல் ரீதியான உண்மை".

அடேங்கப்பா? என்ன அறிவியல் கண்டுபிடிப்பு. இந்த அறிவாளிகள் எல்லாம் ஏன் ஆரியபட்டர் சொன்ன  அறிவியலையும், மூட ஜோதிடத்தையும் குழப்பிக்கிறாங்க?

இது தான் இவங்க ரத்தத்திலேயே ஊரினதாச்சே!

"இன்னும் நிரூபனம் வேண்டும் என்றால், சமீபத்தில் சுனாமி வந்ததே. அப்போது அலைகளுக்கு பக்கத்திலேயே இருந்த திருச்செந்தூர் கோவிலில் சொட்டுத் தண்ணீர் கூடப் படவில்லை. ராமேஸ்வரத்தில் சுனாமி தாக்கவில்லை. இதை எந்த ஊடகங்களும் பெரிது படுத்தாமல் அமுக்கிவிட்டன. ஏனெனில் இது இந்து மதத்தைப்பற்றி இச்செய்தி உயர்வாக சொல்லிவிடுமே. அதுதான் காரணம். ஆனால் உலகையே உலுக்கிய சுனாமி ஏன் இந்த இரு  கோவில்களைத் தொடவில்லை. பதில் தெரிந்தால் கூறுங்கள்?"

அங்க செத்து போன மக்கள் யார பத்தியும் கடவுளுக்கு கவலை இல்ல. அவர் கோவில் மட்டும் அப்படியே இருந்து தன்னை நிரூபிச்சி இருக்கு.  என்ன தெய்வீகம்?
அங்க அவ்வளவு பெரிசா கட்டப்பட்ட திருவள்ளுவர் என்ற  சிலையும் அப்படியேதான் நின்னது!


இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்!


ஆமாம்! ரொம்ப சரி ! நாங்க அடிமையா இருக்கம்னே தெரியாம அடிமையா வாழ வைக்க தெரிந்த தர்மம் அல்லவா?

எப்பதான் மாறுவீங்க?

 சமஸ்க்ரிதம் உங்க மொழிதான். எங்களுக்கு இல்ல சாமியோ!

முக்காலமும் அறிந்தவர்!

எங்கள்  ஊரில்  ஒரு பெரியவர் இருந்தார். அவர் நல்ல ஒரு நாட்டு வைத்தியர் என்று சொல்லத்தக்க வகையில் எல்லோருக்கும் பச்சிலை கொடுத்தும் வீட்டில் உள்ள மற்ற பொருட்கள் மூலமும் பல நோய்களை தீர்த்து வைத்தவர்.

மாலை நேரங்களில் நல்ல கதைகள் சொல்வார். அவர் தான் எங்களுக்கு விக்ரமாதித்தன் கதை சொன்னவர். பட்டம் செய்ய கற்று கொடுத்தவர். மேலும் நீச்சல் கற்று தந்தார்.
சிறு பிள்ளைகளுக்கு நல்ல பல விளையாட்டு சொல்லி தருவார்.

இவர் பல வகையில் முக்காலமும் அறிந்தவர் . ஏனென்றால் எங்கள் ஊரில் எப்போது நிறைய மழை வரும் என்று முன்கூடியே சொல்வார். சுனாமி வரும் முன்னரும் எங்களுக்கு முன்னாடியே சொல்லி விட்டார். நாங்கள் தான் நம்ப வில்லை. 2100 வரும் முன்னர் இந்த உலகில் ஏற்படும் பல மாற்றங்களை பற்றி சொன்னவர்.

ஏன் இந்த முக்காலமும் அறிந்த மகான் எங்களுக்கு மந்திரம் சொல்லி தரவில்லை?
ஒரு வேளை அவருக்கு மட்டுமே அவை பலன் தருமோ?

இவர் எங்கள் ஊரில் உள்ள மற்றவருக்கு இந்த இந்த மருந்து இந்த நோயை குணப்படுத்தும் என்று சொல்லி விளக்கமாக பாடம் எடுப்பார். ஆனால் ஒரு முறையும் நாளை நடப்பதை எப்படி அறிவது என்று மட்டும் சொல்லி தரவில்லை.

ப்லாக் எழுதும் படித்த மனிதர்கள் சில பேர் இந்த பாம்பாட்டி சித்தர், மற்றும் பல சித்தர்கள் பற்றி கதை கதையாக  சொல்வதை இவர் எங்களுக்கு பல முறை சொல்லி இருக்கிறார். ஆனால் இவர்கள் முக்காலம் அறிந்தவர்கள் என்று ஒரு போதும் சொன்னதில்லை.

அருணாசல மலை சுற்றினால் நல்ல உடல் வலுவும், உற்சாகமும் வரும் என்று தான் சொன்னார். இந்த சிவன் எங்களை காப்பான் என்று எப்போதும் சொன்னதில்லை இந்த முக்காலமும் அறிந்தவர்.

தான் நம்புவதை பிறர்க்கு சொல்வதில் இவருக்கு என்ன சிக்கல்?
இப்படி இருக்குமோ?

யாரோ சிலர் சொன்ன கட்டு கதையை சும்மா கதைக்காக மட்டுமே எங்களிடம் சொல்லி எப்போதும் உண்மையான விசயங்களை  மட்டுமே எங்களுக்கு  கற்றுக் கொடுத்தாரோ ?

அப்படினா சுனாமி வரும்னு இவர் சொன்னது கப்சாவா?

எது எப்படியோ! அய்யா புண்ணியவான்களே நீங்கள் நம்பும் முட்டாள் தனத்தை நீங்கள் நிரூபிக்க முடியுமானால் மட்டும் வலையில் இடுங்கள். இல்லாட்ட இந்த பெரியவர் மாதிரி உருப்பிடியா வேற ஏதாவது இருந்தா சொல்லுங்க. இல்லனா மூடிக்கிட்டு போங்க.

பாரதியும் , பெரியாரும்

தமிழின் இருவதாம் நூற்றாண்டு அடையாளங்களில்
இவர்களைக் குறிப்பிடாமல் எதுவும் யாராலும் செய்ய முடியாது.

மனித நேயத்தில் இவர்களின் சிந்தனை மிக விரிவுபட்டது!
தனி மனித சிந்தனையில் இவர்களின் கோட்பாடு மாற்றம் இல்லாதது!
எல்லோரும் ஒரு நிறை! இது தான் இவர்களின் சித்தாந்தம்!

இருவரும் வேதத்தை ஒதுக்கி மனித அறிவுக்கே உயர்வளித்தனர்!
ஜோதிடத்தையும் , ஜாதியையும், குறுகிய எண்ணங்களையும் சாடியவர்கள்!

எல்லா மனிதனும் தன்மானத்துடன் வாழ பாடுபட்டவர்கள்!
தம் கால சமூக சீர்கேடுகளை  அழிப்பதில்   முன் நின்றவர்கள்!

பெண்ணிய சிந்தனையின் ஆதியும் இவர்களே!

மூட பழக்கங்களின் வேராகிய பிராமண சாத்திரங்களை சாடியவர்கள்!

இவர்கள் இருவரையும் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரே கண்மூடி தனமாக இறுதிவரை எதிர்த்தனர்.

தமிழைப் போற்றியவர் பாரதி. தமிழ் எழுத்து சீர்த்திருத்தியவர் பெரியார்!

கல்வி எல்லா மக்களையும் சென்று அடையவேண்டும் என்று விரும்பினர்.

இன்றைய தலைமுறைக்கு இவர்கள் இருவர் பற்றியும் சரியான வகையில் சொல்லாமல்
விட்டுவிட்டோம் நாம்.

பாரதி,பெரியார் வழி வந்த நாம் இன்னமும் நம் மூட எண்ணங்களை விட்டு விலகவில்லை,.
 ஜாதி மோதல்களில் நம் காலத்தை வீணடித்து வருகிறோம்.

பிறப்பு முதல் இறப்பு வரை ஜோதிட சாத்திரங்களில் மனம் செலுத்தி நம் வாழ்வையே முட்டாள்தனமாக வீண் செய்கிறோம். ஜோதிடம் பார்பவர் நமது வழிகாட்டியாகி நம்மை சீரழிக்கிறார்.

ஜோதிடம் பார்ப்பதும், அதை மேலும் மக்கள் அறியாமையில் செல்ல பயன்படுத்துவதிலும் நம்மைப் போன்ற படித்த அறிவாளிகளே தங்களை
மேதைகள் என்று கூறிக் கொண்டு பெருமைப் படுகிறோம்.

அறிவியல் சாதனங்களை நம் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தாமல் நம் மூட நம்பிக்கைகளை மேலும் பரப்ப பயன் படுத்தி வருகிறோம்.

நாம் மேன்மை பெற்று வாழ வேண்டாம். குறைந்த பட்சம் அறிவுள்ளவர்களாக வாழ்வோம். மனித உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்போம். பெண்களை நம் நிகராக மதிப்போம்.