கவுண்டர்---

//1902 ல் கந்தசாமிக் கவிராயர் இயற்றிய நூலை  2010 ல் கந்தசாமிக் கவுண்டர் தன்னுடைய பதிவில் ஏற்றுவது சாலப் பொருத்தமன்றோ! //
     

வேளாளர்  புராணம் என்ற ஒரு கதை திரு கந்தசாமி எழுதி வருகிறார். இதன் முதல் பகுதியிலேயே நான் சொல்லி இருந்தேன். சாதிப் பித்து தான் எழுத வைக்கிறது என்ற கருத்தை ஒட்டி!

அதை நிரூபணம் செய்து உள்ளார் இந்தப் பெரியவர். சாதிப் பெயரை சேர்ப்பதை நம் மனத்தில் இருந்து அழிக்கப் பாடு பட்டனர் முன்னாள். இப்போது இவரைப் போன்று சிலர் செய்யும் செயலுக்கு நாம் என்ன சொல்வது? தனி மனிதனை சாடுதல் அறம் அல்ல என்பதன் காரணமாக இத்துடன். 

இப்படி சாதிப் பெயர்களை சேர்ப்பவர்களில் பெரும்பாலும் நம் சமூகத்தில் உயர்ந்த பிரிவு சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். மாறி வரும் சமூகத்தில் தம் உயர்வை எங்கே இழந்து விடுவோமோ என்ற எண்ணத்தில் இவர்கள் தூவும் தீய சிந்தனை எப்படிக் களையப் படும்? 

இவர்கள் எப்போது மாறுவார்கள்? படிப்பு என்பது இதைக் கூட இவர்களுக்கு சொல்லித் தரவில்லையே!

மனிதனின்  ஆறாவது அறிவு பகுத்து அறிதலே அன்றி மனிதர்களை பிரித்து வாழ செய்யும் சூழ்ச்சி காரணி அல்ல. இந்த உயர்ந்த சாதி எண்ணம் இவர்களின் குருதியில் ஊறி உள்ளது. இதை இன்னும் எத்தனை காலம் இவர்களின் தலைமுறை தாங்கி நிற்கும்?

சாதிகளை விட்டு வெளியே வாருங்கள். உங்களின் தோளோடு சேர கோடி மக்கள் உள்ளனர்.






எழுதுவது யாருக்கு?

நாளும் பல பல செய்திகளை சுமந்து வருகின்றன வலைப் பதிவுகள். ஒவ்வொரு பதிவும் பல சிந்தனைகளின் தொகுப்பாகவோ, சீரியக் கருத்துகளின் வெளிப்பாடாகவோ வெளி வருகிறது.
தமிழ் வலைப் பதிவுகள் பல வகையான பொருட்களை மையமாகக் கொண்டு எழுதப் படுகின்றன.

பெரும்பாலானவை ஆன்மிகம், திரை, சமையல், சோதிடம் என்ற நான்கின் கீழ் அடங்கி விடும்.
கதை, கவிதை, கட்டுரை போன்ற புனைவுகள் சற்று எண்ணிக்கையில் சிறிதாயினும் அவையும் பலரைக் கவர்கின்றன. அனுபவம் என்ற பிரிவில் சில பதிவர்கள் தங்கள் நிகழ்வுகளைப்  பகிர்கின்றனர். 

மிகச் சிலர் அறிவியல், அதை ஒட்டிய பரிணாமம், மேலும் நம்மை மேலும் சிந்திக்கத் தூண்டும் கருத்தாக்கங்களை முன் வைக்கின்றனர். பணம் பண்ணும் வழியாகவும் சிலர் தங்கள் பதிவுகளை செய்கின்றனர். இவற்றுள் சிலர் சோதிடத்தை இந்திய அறிவியலின் பரிணாமமாக முன்னுரைக்கின்றனர்.

ஹோமாபதியை witchcraft  என்று சொல்ல முடிந்தது ஆங்கில மருத்துவர்களால்.  நம்மால் சோதிடத்தை மூடத்தனத்தின் அடையாளமாகப்  புரிந்து கொள்ள முடியவில்லை.

சொல்ல வந்தது இவையல்ல. நாளும் பல்வேறுப்  பொருட்களில் தங்கள் கருத்துகளை வைக்கும் பதிவர்கள் எழுதும் தமிழைப் பிழையின்றி எழுத ஏன் முனையவில்லை? எதோ ரயில்ப் பிடிக்கப் போவது போல் மிக மிக அவசரத்துடன் எழுதுவது போல் எழுதிச் செல்கின்றனர். நாம் எழுதியதை நிச்சயம் நாமாக அழிக்காதவரை நீண்டகாலம் அது இந்த வலை உலகில் வலம் வரும். நம் சிந்தனைகளில் மாற்றுக் கருத்து இருந்தாலும் எழுதுவதைத் திறனுடன் பிழையின்றி எழுதுவோமே! நானும் முயன்று பிழை இன்றி தான் எழுத விளைகிறேன்.

வடமொழிக் கலப்பு இல்லாமல் எழுதப் பழகுவோம் நாம்.  சில  கட்டுரைகளைப் படிக்கும் போது ஏன் அதைக் கிளிக்கினோம் (எழுத்துப் பிழைகள்) என்ற கேள்வி வருகிறது. சிலவற்றைப் படிக்கும்போது நாமும் பிழையின்றி எழுதவேண்டும் என்ற எண்ணம் வளர்கிறது.  திராவிட மொழிகளில் தமிழைத் தவிர மற்றவை வடமொழி ஆதிக்கத்துக்கு உட்பட்டு விட்டன.  நாமாவது நம்மைத் தனித்து நிறுத்தி உயர்வோம்.  தமிழைத் தமிழிலேயே எழுதுவோம்.



நாளும் பல்வேறு பணிகளுடன் விடியலில் எழும் நாம் அந்த நாளின் முடிவில் நாம் முயன்ற அளவு செய்த பணிகளை நிறைவு செய்தோமா என்று எண்ணி சாய்ப்போம் தலையை!