எழுதுவது யாருக்கு?

நாளும் பல பல செய்திகளை சுமந்து வருகின்றன வலைப் பதிவுகள். ஒவ்வொரு பதிவும் பல சிந்தனைகளின் தொகுப்பாகவோ, சீரியக் கருத்துகளின் வெளிப்பாடாகவோ வெளி வருகிறது.
தமிழ் வலைப் பதிவுகள் பல வகையான பொருட்களை மையமாகக் கொண்டு எழுதப் படுகின்றன.

பெரும்பாலானவை ஆன்மிகம், திரை, சமையல், சோதிடம் என்ற நான்கின் கீழ் அடங்கி விடும்.
கதை, கவிதை, கட்டுரை போன்ற புனைவுகள் சற்று எண்ணிக்கையில் சிறிதாயினும் அவையும் பலரைக் கவர்கின்றன. அனுபவம் என்ற பிரிவில் சில பதிவர்கள் தங்கள் நிகழ்வுகளைப்  பகிர்கின்றனர். 

மிகச் சிலர் அறிவியல், அதை ஒட்டிய பரிணாமம், மேலும் நம்மை மேலும் சிந்திக்கத் தூண்டும் கருத்தாக்கங்களை முன் வைக்கின்றனர். பணம் பண்ணும் வழியாகவும் சிலர் தங்கள் பதிவுகளை செய்கின்றனர். இவற்றுள் சிலர் சோதிடத்தை இந்திய அறிவியலின் பரிணாமமாக முன்னுரைக்கின்றனர்.

ஹோமாபதியை witchcraft  என்று சொல்ல முடிந்தது ஆங்கில மருத்துவர்களால்.  நம்மால் சோதிடத்தை மூடத்தனத்தின் அடையாளமாகப்  புரிந்து கொள்ள முடியவில்லை.

சொல்ல வந்தது இவையல்ல. நாளும் பல்வேறுப்  பொருட்களில் தங்கள் கருத்துகளை வைக்கும் பதிவர்கள் எழுதும் தமிழைப் பிழையின்றி எழுத ஏன் முனையவில்லை? எதோ ரயில்ப் பிடிக்கப் போவது போல் மிக மிக அவசரத்துடன் எழுதுவது போல் எழுதிச் செல்கின்றனர். நாம் எழுதியதை நிச்சயம் நாமாக அழிக்காதவரை நீண்டகாலம் அது இந்த வலை உலகில் வலம் வரும். நம் சிந்தனைகளில் மாற்றுக் கருத்து இருந்தாலும் எழுதுவதைத் திறனுடன் பிழையின்றி எழுதுவோமே! நானும் முயன்று பிழை இன்றி தான் எழுத விளைகிறேன்.

வடமொழிக் கலப்பு இல்லாமல் எழுதப் பழகுவோம் நாம்.  சில  கட்டுரைகளைப் படிக்கும் போது ஏன் அதைக் கிளிக்கினோம் (எழுத்துப் பிழைகள்) என்ற கேள்வி வருகிறது. சிலவற்றைப் படிக்கும்போது நாமும் பிழையின்றி எழுதவேண்டும் என்ற எண்ணம் வளர்கிறது.  திராவிட மொழிகளில் தமிழைத் தவிர மற்றவை வடமொழி ஆதிக்கத்துக்கு உட்பட்டு விட்டன.  நாமாவது நம்மைத் தனித்து நிறுத்தி உயர்வோம்.  தமிழைத் தமிழிலேயே எழுதுவோம்.நாளும் பல்வேறு பணிகளுடன் விடியலில் எழும் நாம் அந்த நாளின் முடிவில் நாம் முயன்ற அளவு செய்த பணிகளை நிறைவு செய்தோமா என்று எண்ணி சாய்ப்போம் தலையை!

4 comments:

Dr.P.Kandaswamy said...

நீங்கள் எழுதியதுதான்:

//எதோ ரயில்ப் பிடிக்கப் போவது//

ஏன் இப்படி நடக்கின்றது?

Dr.P.Kandaswamy said...

//நானும் முயன்று பிழை இன்றி தான் எழுத விளைகிறேன்.//

மன்னிக்கவும். ஆசிரியராக வேலை பார்த்ததினால் பிழைகள்தான் முதலில் கண்ணில் படுகின்றன.

நாளும் நலமே விளையட்டும் said...

தங்களின் சுட்டுதலுக்கு நன்றி.

மார்கண்டேயன் said...

முதலில் உங்கள் எண்ணங்களுக்கு என் வந்தனங்கள், உங்களுக்கு எழுதும் முதல் பின்னூட்டமே, குறை என்று கொள்ளாமல், பிழை அறிந்து களையவே, என் பார்வையில் பார்த்தவைகள், பட்டவைகளை பாங்குடன் உங்களின் பார்வைக்கு . . . ,
ரயில்ப் - புகைவண்டி அல்லது இணையான தமிழ் சொல்,
ஹோமாபதி - ஓமியோபதி, ஹோ வடமொழி.,
கிளிக்கினோம் - சொடுக்கினோம்,
உங்களின் முயற்ச்சிகளில் உங்களுடன்,