சாதிப் பெயர்கள் !

சாதிப் பெயர்கள் இந்தியா  முழுவதும் உள்ள மக்கள் நீக்க முன் வர வேண்டும் என்று திரு அன்புமணி கட்டுரை எழுதினார்!
அதற்கு பதில் சொன்ன பெரும்பாலான மக்கள் அன்புமணிக்கு அந்த அருகதை இல்லை என்று தம் நிலை நின்றனர். யார் சொன்னார் என்பதை விட என்ன கருத்து என்பதை நிறுத்தி அதை சிந்தித்து அதன் பின் தங்கள் கருத்தை முன் வைப்பவர் நம்மில் அதிகம் இல்லை.

சாதிப் பெயர்கள் தங்கள் அடையாளங்களா?
சாதி தன் பெயரில் இருந்து நீங்கி விட்டால் சாதி சமூகம் விட்டு நீங்கி விடுமா? என்ற கேள்விகள் கேட்டு தம் செயலுக்கு நியாயம் கற்பிக்கின்றனர்.
தான் உயர் சாதி என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே நிறைய பேர் தங்கள் பெயருடன் சாதியை சேர்த்துள்ளனர்! அதை சொல்வதிலும் பெரும் உவகை எய்துகின்றனர். 

என்னைப் போன்ற எத்தனையோ பேர் தங்கள் சாதி பெயர் சொல்லவே கூசவும் செய்கின்றனர், தங்கள் சாதி பல காலம் தாழ்த்தி வைக்கப் பட்ட காரணத்தால்! தம் பெயரிலேயே தங்கள் சாதி கொண்ட எல்லோரும் தம் சாதி மீது தம்மையும் அறியாமல் பரிவு கொண்டுள்ளனர் என்பது நம்மில் எல்லோருக்கும் தெரியும். எங்கோ சிலர் தம் பெற்றோர் கொண்ட பெயரின் காரணமாக இந்த சிலுவைகளை சுமந்து திரிகின்றனர். இவர்களேனும் தங்கள் பிள்ளைகளிடம் இந்த சிலுவைகளை தராமல் இருப்பார்களா?

தேவர்,பிள்ளை, நாடார், செட்டியார், சைவர், முதலியார், ஐயர், ஐயங்கார் என்று பலப்பல பெயர்களைத்தான் நாம் பார்த்திருப்போம். பறையர், சக்கிலியர் என்று எங்கேனும் கண்டு உள்ளோமா? ஏன்? 

இட ஒதுக்கீடு என்ற ஒன்றை காரணம் காட்டி எல்லா உயர் சாதி மக்களும் தங்கள் வாழ்வு நலிந்து விட்டதாக புலம்பித் திரிகின்றனர். ஒரே ஒரு கணம் சிந்தியுங்கள்! ஒரு வேளை நீங்கள் -- தாழ்ந்து போய் உள்ள சமுதாயத்தில் பிறந்து இருந்தால்? உங்கள் பிள்ளை உங்களை விட்டு காணாமல் போய் யாரோ ஒரு தாழ் சாதி குடும்பத்தை அண்டி இருந்தால்?

விட்டு விலகுவோமே சாதியை பெயரிலிருந்தேனும்!

0 comments: