இறந்து விட வேண்டும் !

பட்டினத்தார்  போல் என் மனம் எதன் மீதும் பற்று வைக்காமல் வாழ முடியுமா என்னால்?
இறப்பது நீண்ட தூக்கம் என்று சொல்லும் எல்லா மக்களும் தூங்குவது போல் மிக எளிதான ஒரு செயலாக இறப்பும் இருக்க ஒரு வழி சொன்னால் பரவாயில்லை!

இறப்பு என்பது தான் என்ன? 

இந்த உடலை விட்டு உயிர் நீங்குவதா? 
இந்த உடலில் உயிர் எங்கு உள்ளது? 
உயிர்மெய் எழுத்தில் உயிர் எங்கு உள்ளது?
எழுத்தில் உயிர் இல்லை என்பதைக் குறிக்க தான் புள்ளி வைத்து அடையாளம் செய்கிறோமே தவிர உயிர்மெய் எழுத்தில் உயிர் தனியாக, அல்லது கலந்து இருப்பதைக் குறிக்க எதுவும்  இல்லையே!

இயக்கம் இல்லாத உடலில் உயிர் இல்லை என்பதானால் ? இயக்கம் உள்ள எல்லாம் உயிர் கொண்டதா? சிந்தனை செய்யும் மனம் கொண்ட மனிதனுக்கு உயிர் இருக்கிறதா? பிற உயிர்களை நேசிக்கும் ஒருவனுக்கு இருக்கிறதா? உயிர்களை வெறுப்பவனுக்கா?
உயிர்களை வெறுப்பவனுக்கு உயிர் எதற்கு? வாழ்வியலையே எதிர்க்கும் சிந்தனை கொண்ட மனிதனுக்கு உயிர் இருப்பதன் பயன் என்ன?

இறந்து விட வேண்டும் என்று எண்ணுவது கோழைத் தனமா? அல்லது இறக்க துணிவு இல்லாததா? ஒருவேளை வேண்டும்போது எல்லாம் இறந்துவிட்டு மீண்டும் வேண்டும்போது பிறக்கமுடியுமானால் நம்மில் எத்தனை பேர் இது வரை செத்து செத்து விளையாடி இருப்பர்?

மனித மனம் ஏன் இறப்பைப் பற்றி சிந்திக்கிறது? நம்மை நேசிக்க யாரும் இல்லை என்றா? அல்லது இதுவரை தான் அன்பு காட்டிய ஒருவர் நம்மை புறக்கணிப்பதை தாள மாட்டாமையா? தனது இறப்பே தன்னை புறக்கணித்தவருக்கு  தான்  தரும் தண்டனை என்று நினைப்பது எந்த அளவில் சரி?

தன்னை முன்னிலை படுத்திக்கொள்ள நினைக்கும் மனதின் ஒரு போராட்டம் தான் தற்கொலையா? தான் அனுபவப்பட்டு அறியாத ஒன்றை ஏன் மனம் அடைய முனைகிறது தன்னால் மீண்டு வரமுடியாது என்று அறிந்தபின்னும்?

மானத்தின் பால் பற்று கொண்டு தன் மானத்துக்கு இழுக்கு வந்தபின்னால் வாழ விரும்பாமல் வடக்கிருந்து உயிர்நீத்த மனிதர்கள் நமக்கு சொல்ல முனைவது என்ன? இறந்து தன் இருப்பை உணர்த்தும் மாண்புடைய பெரியோர் பலர் வாழ்ந்த மண்ணில் தற்கொலை எண்ணி சிந்திக்கும் மனதை என்னவென்று சொல்வது? பல்லாயிரம் பேர் வாழும் இந்த மண்ணில் தனது வாழ்வை செம்மையாக வாழும் மனிதர்கள் எத்தனை  பேர்? அதில் எத்தனை பேர் எத்தனை முறை இறப்பை வேண்டி இருப்பர்?
 
பிறவற்றின் மீது பற்று இல்லாமல் வாழ்வது இறப்பை நோக்கிய பயணமா? அல்லது வாழ்வை நோக்கிய பயணமா? பற்று இல்லாத நிலையில் மனது எதையும் முழுமையாக நோக்குவது உண்மை தானே?  அப்படி எனில் அது முழுமையாக வாழும் வாழ்வாகுமா? அனுபவிப்பது வாழ்வா? தூர இருந்து பார்த்து உணர்வது வாழ்வா?

முழுமையான வாழ்வு என்பது எது? எப்போது மரணத்தை முழுமையாக மனது எதிர்கொள்ளும் பயமில்லாமல்?

இறப்பை நோக்கியதா? வாழ்வை நோக்கியதா? எனது இந்த சிந்தனை!
நான் சொல்ல முனைவது என்ன?


3 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

விழிப்பளிக்கும் தேடல்..

முனைவர்.இரா.குணசீலன் said...

எனது தேடலைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன் நண்பா..

எரித்தால் என்ன?
புதைத்தால் என்ன?

http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_254.html

நாளும் நலமே விளையட்டும் said...

நன்றி திரு. குணசீலன் அவர்களே!
உங்கள் இடுகைகள் எல்லாம் சிந்தனைக்கு உரியன!