பள்ளி விட்டு வீட்டுக்கு வந்தான் வளவன். தங்கை கமலமும், ரகுவும் விளையாடிக் கொண்டு இருந்தவர்கள் இவன் நிழல் தெரிந்ததும் பாய்ந்து கட்டிக் கொண்டனர்.
அண்ணா! அண்ணா! என்னைத் தூக்கு! என்று ஆரவாரம் செய்தனர். கை, கால் கழுவி வந்தவன் இருவரையும் தூக்கிக்கொண்டு தட்டாமாலை சுற்றினான்.
காட்டு வேலைக்கு சென்ற அம்மா இன்னமும் வீடு வரவில்லை. அப்பா எதோ கூலி வேலை செய்து வந்தார். இவனுக்கு பசி. வீட்டில் என்ன இருக்கிறது என்று பார்த்தான். காலையில் வடித்த சோறும், மூன்றாம் நாள் வைத்த புளிக் குழம்பும் ஒரு தட்டில் போட்டு எடுத்து வந்து மூவரும் உட்கார்ந்து ஆளுக்கு ஒரு வாய் சாப்பிட்டனர். மூவரின் வாயில் இருந்து ஒழுகிய சோறு அந்த தட்டில் எஞ்சி இருந்தது. அதனையும் உண்டு கை கழுவினான்.
அம்மா வர இன்னம் வேளை இருந்தது. அடுப்பு பற்றவைத்து உலை வைத்து அரிசி களைந்தான். பொழுது இருட்டும் வேளையில் அம்மா வந்தாள். துணிமுடிப்பில் எடுத்து வந்த கரிசலாங்கண்ணி கீரையை அம்மாவும் மகனும் ஆய்ந்தனர். மண்ணெண்ணெய் விளக்கு சற்று மங்கலாக எரிந்ததால் கடைக்குப் போய் எண்ணை வாங்கி வந்து ஊற்றினான்.
சமையல் வேலை முடிய இரவு ஒன்பது ஆகி விட்டது. சின்னது இரண்டுக்கும் சோறு ஊட்டி படுக்கை விரித்தாள் அம்மா. அப்பா வரும் அரவம் கேட்டது. அன்றைய வேலைக் களைப்பு அவர் முகத்தில் அந்த இருட்டிலும் தெரிந்தது, கூடவே கெட்ட சாராய நெடியும்.
இவனை அருகில் அணைத்து முத்தம் கொடுத்தார். இவன் தன் முகத்தை திருப்பிக் கொண்டான். அவரை விட்டு வெடுக்கென விலகி வந்தான். இரண்டு நாட்கள் முன்புதான் இவனிடம் சத்தியம் செய்து இருந்தார் " இனிக் குடிக்க மாட்டேன் என்று". இன்று மீண்டும்.
இவனுக்கோ குமட்டிக் கொண்டு வந்தது. இதைகேட்டே ஆகவேண்டும் என்று முடிவு செய்தான். அதற்குள் அம்மா இவனிடம் இது எதையும் கேட்காதே என்று முனு முனுத்தாள். என்னடி அங்க குசு! குசு!னு பேச்சு என்று அப்பா சத்தம் போட்டார்.
ஒன்றும் இல்லை! என்று பதில் சொல்லிவிட்டு சாப்பிட தயார் செய்ய உள் எழுந்து போனாள். அந்த நேரத்திலும் அம்மா கடைந்த கீரை மணத்தது. அப்பாவின் தட்டில் சோறு போட்டு கீரை வைத்தாள். ஒரு வாய் பிசைந்து உண்டவர் என்னடி உப்பு கூட போடத் தெரியாதா? எத்தனை தடவை சொன்னாலும் இப்படி தானா என்று சற்று தொனி ஏற்றி கேட்டார். நான் பார்க்கும்போது சரியாகத்தான் இருந்தது. இதோ நீங்கள் வேண்டும் அளவு போட்டு கொள்ளுங்கள் என்று உப்பு கிண்ணத்தை அருகில் வைத்தாள். ஏண்டி! நான் என்ன சொரணை கெட்டவனா என்று உப்பினை அந்தப் பக்கம் தள்ளி வைத்தார்.
வீட்டில் அரிசி தீரபோகுது அரிசி வாங்க பணம் வேண்டும் என்று இவன் ஆரம்பித்தான். அம்மா இவனை தீரா கோபத்துடன் பார்த்தாள். என்னடா! உங்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் விடியாதா? என்று அவர் எகிறினார். இப்போது அவர் பேசும் பேச்சுகள் கேட்டு அவன் காதுகள் கூசிப் போயின.
கோபத்தில் அவர் முன்பு இருந்த சோற்றுப் பாத்திரங்களை விசிறி அடித்தார். பதிலுக்கு அம்மா எதோ சொல்லப் போக இவர் எழுந்து காலால் உதைக்க முனைய இவன் குறுக்கே விழுந்து தடுத்தான். இவனை ஒரு அறை அறைந்து அம்மாவை ஒரு உதை விட்டார். அம்மாவிடம் இருந்து விசும்பல் மட்டுமே வெளி வந்தது. ஆக்கிய சோறும், கீரையும் அந்த அறையின் நாற்புறமும் சிதறிக் கிடந்தன.
இவனுக்கு பசியும் அடியும் சேர்ந்து தலைவலியை உண்டாக்கி விட்டன. அப்பா வெளியில் கிடந்த கட்டிலில் படுத்துக்கொண்டார்.
0 comments:
Post a Comment