நித்யம் ஆனந்தமாக!(2)

நித்யம் ஆனந்தமாக இருக்க சொன்னவரை ஹரிதுவாரை நோக்கித் துரத்திய ஊடகங்களை
நோக்கி ஒரு கேள்வி? நீங்கள் நாளும் நாளும் நடத்தும் நிகழ்ச்சிகளில்  எத்தனை எத்தனை கீழ்த்தரமான சிந்தனைகளை மக்களுக்குத் தருகிறீர்கள். உங்களைக் கேட்பார் யாரும் இல்லையா?

காவி கட்டி, அரசன் மனைவியுடன் கூடிய, ஆதி சங்கரர் வழியில்!
இன்னமும் வரலாற்றின் பக்கங்களில் தேடினால் தெரியும் துறவிகள் எப்போதும் துறவிகள் அல்ல என.

மக்கள் ஏன் இப்படி காவி கட்டிய மனிதர் பின்னால் போகிறார்கள்?
தங்களால் மனதாலும் நினைவாலும் சில நிமிடங்கள் கூட விட்டு விட முடியாத உறவுகளையும், உணர்வுகளையும் விட்டு விட்டு வாழும் இவர்கள் எத்தகைய மன உறுதி கொண்டவர்களாக இருக்க முடியும்? என நினைத்து இவர்கள் நிச்சயம் தங்களை விட மேலானவர் என முடிவு செய்து அவர் காட்டிய வழி செல்ல முனைகின்றனர்.

துறவியின் காலில் விழும் காரணமும் இதுதான். எப்போது ஒரு துறவி இந்த நிலையில் தவறி விழுகிறானோ அப்போதே அவன் வார்த்தை மதிப்பிழந்து விடுகிறது.
இதுவரை எந்த துறவி சொன்ன வாக்கும் புதியது அல்ல. ஆனால் ஒவ்வொரு சமூகத்திலும் அந்த அந்த காலங்களில் வேறு வேறு நிலையில்  சிந்திக்கும் திறன் கொண்ட மனிதர்கள் கிடைக்கிறார்கள். அவர்களின் சிந்தனையே சமூகத்தை வழி நடத்தும். இதுவரை எந்த ஒரு துறவியும் சமூகத்தை சமூகத்தின் காரணம் தொட்டு வழி நடத்தி இருக்கிறாரா என்பது விடை சொல்ல முடியா கேள்வி.

சங்கர மடத்தின் அன்பு வழியில் ! சென்ற , நாம் அறியக் கிடைத்த நம்மை மேன்மைக்கு உள்ளாக்கிய நம் உள்ளக் கதவுகளை திறந்து வைத்த மாமணியை,  நித்யம் ஆனந்தம் கொள்ளத்தக்க சிந்தனைகளை நமக்கு அள்ளித்தந்த மனிதரை நாம் துன்பமடையச்  செய்யலாமா?

சில ஊடகங்கள் கேள்வி கேட்கின்றன. நித்யானந்தர் எப்போது சொன்னார் தான் துறவி என? அவரது படுக்கை அறையில்  நுழைய நமக்கு என்ன உரிமை ?

நம் சமூகத்தில் எதுவும் சொல்லி புரியவேண்டியது இல்லை. காவி கட்டினால் அவர் துறவி இது தான் அவரது வடிவம். எப்போது ஒருவன் காவி கட்டினானோ அப்போது அவன் துறவி. இந்த பிம்பம் வைத்து இந்த சமூகத்தை வழி நடத்த முனைந்த மறுகணம் அவன் சிலக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவன் ஆகிறான்.  அவற்றில் ஒன்று அவனது படுக்கை அறையும் திறந்த புத்தகம் எனக் காட்ட வேண்டியதும் ஒன்று.

சன் டிவி எதோ இப்போது தான் படுக்கை அறைக் காட்சியை நமது வீட்டு வரவேற்பறையில் முதல் முதலாக காட்டுவது போல் நம் பதிவர்கள் எழுதுவது வேடிக்கை. நாம் பார்க்கும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் இப்படித் தானே இருக்கின்றன. ராமாயணம், மகாபாரதம், விக்ரமாதித்தன் கதைகளில் இல்லாத
ஆபாசமா இவர்கள் காட்டி விட்டனர்?
கவிஞர்கள், எழுத்தாளர்கள் என சொல்லிக் கொள்ளும் எத்துணைப் பேர் தங்கள் படைப்புகளை ஆபாசத்தால் நிரப்பி அளிக்கின்றனர்? இவர்கள் சிந்தனை வரைமுறைக்கு உட்பட்டதல்ல எனும்போது?
சன் டிவி செய்த இந்தச் செயலால் எத்தனைப் பேரின் முகமூடிக் கிழிந்து அழுக்கும், நாற்றமும் வெளியாகிறது. இதற்கு நன்றி!

ஒன்று மட்டும் தெளிவு. வெளியாகும் ஒவ்வொரு செய்திக்கும் மதச் சார்ந்தும், அரசியல் சார்ந்தும் பார்க்கும் மனநிலை நம் மக்களை விட்டு நீங்கவில்லை என்பதற்கு நேற்று வெளி வந்தப் பதிவுகளும், அதன் பின்னூட்டங்களும் சான்று.

வேடிக்கை என்னவெனில் மதச் சார்புடையவர் நித்யானந்தர் செய்தது எந்த மனிதனும் செய்வது! அவர் படுக்கை அறையை அம்பலப் படுத்தியது சன் டிவி குற்றம் என பழி சுமத்தியது! 

0 comments: