வன்புணர்வுக்கு உள்ளான பெண் விரும்பினால் காரணமானவனையே மணக்கலாம்!

இந்திய உச்ச நீதி மன்ற நீதிபதி கருத்தைப் பாருங்கள்! இது அவரது கருத்தாக இருப்பதால் அதைப் பற்றி இங்கு நம் கருத்தைக் கூறுவது நிச்சயம் நீதிமன்ற அவமதிப்பு அல்ல!

எப்போது மாறும் நம் ஆணாதிக்க மனோபாவம்?
ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு தான் " வன்புணர்வுக்கு உள்ளான பெண் விரும்பினால் காரணமானவனையே மணக்கலாம்!" கற்பு --என்ற சித்தாந்தம் உருவாக்கிய வெளிப்பாடு தானே இது?
தன் உணர்வுகளை மதிக்காத ஒரு மிருக மனம் பெற்ற மனிதன் தன்னை உடல் அளவில் அணுகிய ஒரேக் காரணம் பற்றி, அவனை மணந்து கற்பு நெறிக் காக்க வேண்டும் என்ற சிந்தனையின் வெளிப்பாடு?

கேவலம் பெண்ணின் கற்பு அவளின் உடம்பா? அவளின் மனத்திற்கு ஒன்றும் தொடர்பு இல்லையா? எந்த ஒரு பெண்ணாவது தன்னை ஒரு விலங்கு போல் கைக்கொண்ட மனிதனை ஏற்றுக் கொள்ள விளைவாளா?

விளைவாள்! எப்போது தெரியுமா?
நம் சமூகம் அந்தப் பெண்ணிடம் விதைத்த கற்பு பற்றிய சிந்தனையையும், அதன் மூலம் எழும் எண்ணங்களையும் கொண்டு அவள் முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளப்படும்போது!

ஏன்? இந்த நாட்டில் வேறு நல்ல ஆண்களே கிடைக்கமாட்டரா அந்தப் பெண்ணுக்கு?
உன்னை துன்புறுத்திய  மனிதன் மனிதனே அல்ல! அவனைப் பற்றிய எண்ணங்களை நீக்கி புது வாழ்வு நீ அடைய நாங்கள் துணை நிற்போம் என சொல்லாதா இந்த சமூகம்? நம் திரைகளில் காணும் நாட்டாமைத் தீர்ப்பா நம் சமூகம் சொல்லவேண்டும்?


ஒரு வேளை மனமாகாதப்  பெண்ணுக்கு இந்த உபதேசம் சொல்லப் பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது! மணம் செய்து தன் கணவனுடன் அன்புடன் வாழ்ந்து பிள்ளைகள் பெற்ற பெண்ணுக்கு?
அவள் கற்பு என்னும் அணிகலன் இழந்தவளா? இவள் இனி யாருடன் வாழ வேண்டும்? இதையும் இப்பெண்ணுக்கு இந்த சமூகம் தான் திணிக்குமா?


பெண்களே! ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்! உங்கள் வாழ்வு உங்கள் கையில்! உங்கள் சிந்தனை பழம்பஞ்சாங்கத்தில்  இருந்து வரக் கூடாது.  பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக சிந்தியுங்கள்! உங்கள் உறவில் யாரேனும் இப்படி வன்புணர்வுக்கு ஆளானால் அப்பெண்ணுக்கு துணை நின்று அப்பெண்ணுக்கு நல்வழி காட்டி வாழுங்கள்! உங்களை துன்புறுத்தியவனை விட நிச்சயம் நல்ல மனிதன் உங்களுக்கு கிடைப்பான். நம்புங்கள்! விட்டு விலகுங்கள்! அழுக்கான சிந்தனை விட்டு!

0 comments: