இதைப் போல் நானும் எழுதுவேனோ எப்போதேனும் ?

குளியலறைக்குப் போய்ச் சந்தனச் சோப்புப் பூசி உடல் குளிர நீராடி வேறு நல்ல புடவை மாற்றித் திலகமிட்டுக் கொண்டாள் அவள். கண்களுக்கு ஆசையோடு மையும் தீட்டிக் கொண்டாள். அவள் அப்போது அந்த நள்ளிரவில் தனக்குத்தானே செய்து கொண்ட காரியங்களுக்கு ஏதோ ஓர் அர்த்தமிருக்கிறாற் போலவும் தோன்றியது. அவள் அப்போது தான் பரிபூரணமான சந்தோஷத்தோடு இருப்பதாகவும் உணர்ந்தாள். அப்படி உணர்ந்த மறுகணமே அதன் மறுபுறத்தில் பரிபூரணமான துக்கத்தையும் உணர்ந்து அநுபவித்தாள். இருளில் தட்டுத் தடுமாறித் தோட்டத்துக்கு ஓடிப்போய் அரைகுறையாக மலர்ந்திருந்த இரண்டொரு ரோஜாப் பூக்களையும், அடுக்கடுக்கான குடை மல்லிகைப் பூக்களையும் பறித்து ஈரக்கூந்தலை முடித்து அதில் சொருகிக் கொண்டு வந்தாள். ஏதோ நினைத்தவளாக உள்ளே போய்த் தேடி எடுத்து அரங்கேறிய நாளிலிருந்து தன் பட்டுப் பாதங்களை அலங்கரித்த அந்தச் சலங்கைகளையும் பாரதி எழுந்து விடுவாளோ என்ற பயத்தோடு காலில் ஓசைப்படாமல் அணிந்து கொண்டாள். இந்தப் பாழாய்ப் போன உலகத்துக்குப் புகழோடும், பெருமையோடும், தான் அறிமுகமாகக் கருவியாக இருந்த எல்லாவற்றையும் தன்னோடு சேர்த்து எடுத்துக் கொண்டு போய்விட வேண்டும் போல ஓர் ஆசை அப்போது அவளுள்ளே எழுந்து தவித்தது. மேஜை விளக்கருகே கையைக் கொண்டு போய்ப் பட்டுப் புடவைத் தலைப்பினால் தன் விரலிலிருந்த மோதிரத்தைத் தேய்த்துப் பளபளக்கச் செய்த பின் அதன் பொன்னொளியில் தன் முகத்தைப் பார்த்த போது அந்த மோதிரத்தை அணிவித்த தெய்வத்தின் ஞாபகம் வந்து மனத்தைப் பிசைந்தது. அவளுடைய சலங்கையணிந்த பாதங்கள் உடனே எங்கோ புறப்பட்டுப் போய்விட வேண்டும் போல் துடிதுடித்தன. மைதீட்டிய விழிகள் யாரையோ பார்க்கப் பறந்தன. சிவந்த உதடுகள் யாரிடமோ புன்முறுவல் பூக்க நெகிழ்ந்தன. கமலக் கைகள் யாரையோ வணங்க வேண்டும் போலக் குவிந்து கூப்புவதற்கு முந்தின.

4 comments:

ப.கந்தசாமி said...

உங்க பதிவிற்கு இன்றுதான் முதல் முதலாக வந்திருக்கிறேன். ஒன்றும் சரியாக பிடிபடவில்லை.
கற்பனை நன்றாக இருக்கிறது.
உங்கள் பதிவுகளை முழுவதும் பார்க்க விழைகிறேன்.

நாளும் நலமே விளையட்டும் said...

தங்கள் வருகைக்கு நன்றி!
இது திரு. நா. பா எழுதிய பொன்விலங்கு என்னும் நாவலின் ஒரு பக்கத்தில் இருந்து
அப்படியே copy செய்துள்ளேன்.

விக்னேஷ்வரி said...

என்ன சொல்ல வர்றீங்க... தலைப்பைப் பார்த்தா வேர யாரோ எழுதினதா...

நாளும் நலமே விளையட்டும் said...

ரொம்ப நாள் கழித்து பொன் விலங்கு நாவலைப் படித்தேன். உணர்வுக் குவியலாக ஒரு பெண்ணை சித்தரிக்கும் திறன் கண்டு மிக வியந்து என்ன செய்வது
எனத் தெரியாமல் நாம் ரசித்த இந்தப் பகுதியை மற்றவரும் ரசிக்கட்டும்
என்ற ஆவலில் இங்கு ஒட்டி விட்டேன்.
இது வரை என்னால் ஒரு புனைவு கூட திறனுடன் எழுத இயலவில்லை. அது கூட காரணமாய் இருக்கலாம்.
இதற்குப் பிறகு தான் எனக்குத் தெரியும். இந்தப் பெண் தற்கொலை செய்து கொள்கிறாள் என.