உங்கள் நாட்கள் எண்ணப் படுகின்றன(மறு பதிப்பு)!

நாம் எல்லோரும் பிறந்தவுடனே நம் பயணம் இறப்பை நோக்கித்தான் என்பதை நம்மை பெற்ற தாயும் அறிவாள்! பிணம் சுற்றி அழும் கூட்டமும் அறியும் இனி இவர் எழ மாட்டார் என்று!


வாழ்வின் எதார்த்தம் பளிச்சென தெரிந்தும் நாம் ஏன் ஒருவரை ஒருவர் ஏளனத்தோடு, ஒரு வித கர்வத்தோடு பார்க்கிறோம்? நாம் தான் எல்லாம் அறிந்தவர், நமக்கு தான் எல்லாம் உரிமை என்ற சிந்தனை எப்படி தோன்றியது? 


நாம் பிள்ளைகளாய் இருந்தபோது இருந்த நேர்மை எங்கே? நேர்மை புதிதாக கற்பிக்கப் பட்டதா?
இல்லையே! குழந்தைகளிடம் பாருங்கள் அவர்கள் நேர்மை மிக இயல்பானதாக இருப்பது தெரியும்! ஒவ்வொரு முறை குழந்தையை பார்க்கும்போதும் புதிதாய் பூத்த மலர் போல் என்ன ஒரு மலர்ச்சி அதன் கண்களில்! என்று வியப்பேன். இந்த மலர்ச்சி ஏன் நம்மை விட்டு போனது? நான் அறிந்தவன் என்ற கர்வம் காரணமா?
Photo taken from tarjet,bangaladesh
ஜாதி, மதம் எப்படி நம்மை பிடித்துக் கொண்டது? எப்படி என் ஜாதிக்காரன் மீது மட்டும் எனக்கு அளவு கடந்த நம்பிக்கை? இவர்கள் நம்மை நம் சாவில் இருந்து காப்பாற்றுவார்களா?  
புதிதாய் பார்க்கும் யாரிடமும் அவர் என்ன சாதியாய் இருப்பார் என்று அறிந்துகொள்ள துடிக்கும் காரணம் என்ன? நம் ஆளுமை காட்டவா? அல்லது நம் அடிமைத்தனத்தை வெளிப்படுத்தவா?


கோயில் பூசாரியை சாமி! சாமி! என்று அழைப்பதன் நோக்கம் என்ன? அவர் நம் கடவுளிடம் சொல்லி நம் வாழ்நாளை நீட்டிப்பார் என்பதற்கா?


ஜோதிடம் இன்று நம் எல்லோரையும் ஆட்டி வைக்கும் முக்கிய காரணி ஆனதற்கு காரணம் என்ன? யோகம் என் ஜாதகத்தில் இருக்கிறதா என்று ஒவ்வொரு ஜோதிடன் இடத்திலும் கேட்டு கேட்டு அலுப்பது எதற்கு? எல்லாம் அறிந்த ஏகாம்பரம் போல் இந்த ஜோதிடர்கள் தாமே கடவுள் என்பதாக சொல்லும் கதைகளுக்கு காரணம் என்ன? என் ஜாதகத்தை கொடுத்தால் இவர்கள் சொல்லும் பரிகாரம் செய்தே என் சொத்து அழிந்து விடும் என்று தெரிந்தும் நாய் போல் இவர் பின்னால் சுற்றுவது ஏன்? 


தெருவெங்கும் பிள்ளையார் கோயில்கள் பலபல பெயர்களில் இருப்பது ஏன்?
ஊர் தோறும் புது புது சாமியார்கள் உதிப்பதும் அவர்கள் லிங்கம் முதல் பலபல பொருட்களை மந்திரம் மூலம் கொண்டு வருவதும்?


திருவண்ணாமலை முதல் கொண்டு புது புது கோயில்கள், புது புது வழிபாடுகள்! 
விதம் விதமான நேர்த்திகடன்கள்! அது என்ன இந்திய மக்களாகிய நமக்கு மட்டுமே 
இந்த கடவுள்கள் பரிகாரம் செய்ய சொல்லி வலியுறுத்துகின்றன?


இந்த முட்டாள் தனத்திற்கு எல்லாம் அடிப்படை காரணம் ? நம் எதிர்காலத்தின் மீது நமக்கு இருக்கும் பயம்? நாம் கற்ற கல்வி நமக்கு நம் மீது நம்பிக்கை வளர்க்காததா? நம்மை எப்போதும் ஒரு மயக்கத்திலே வைத்திருக்கும் இந்த மாயங்களை விட்டு எப்போது வெளி வருவோம்?


மீண்டும் மீண்டும் நாம் ஏன் நமக்கு தெரியாத ஒன்றின் மீது அளவு கடந்த பயம் கொண்டு அதைப் பற்றி எல்லாம் தெரிந்தவர் போல் பேசும் வீணர்களை கேட்டு வாழ்கின்றோம்?
ஆன்மிகப் பெரியோர்கள் எல்லோருமே சொல்லி சென்றனர் " உண்மை அடியாரை கோள் என்ன செய்யும் என". கோளறு பதிகமே பாடி சென்ற சமூகம் நமது. நம்மில் எத்துணை பேர் நாம் கற்ற கல்வி வழி சிந்தனை செய்து நம் செயல்களை நிறைவேற்றுகிறோம்?


வாழ்வது சில காலம்! வாழ்வும் தாழ்வும் நம் கையில்! வாழ்வோம் எப்போதும் புதிதாய் பிறந்தவர் போல்!


0 comments: